ரூ.1.30 லட்சத்தில் புதிய ஆம்பியர் நெக்சஸ் EX+ EV ஸ்கூட்டர் அறிமுகம்: ராணிப்பேட்டையில் உற்பத்தி!
ஆம்பியர் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சஸ் மின்சார ஸ்கூட்டரின் புதிய Nexus EX+ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.1,29,999 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் இணைப்பு வசதிகளுடன் கூடிய Intellipack பதிப்பின் விலை ரூ.1,35,999 ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள ஆம்பியர் ஷோரூம்களில் கிடைக்கும்.
புதிய நெக்சஸ் EX+ மாடலின் முக்கிய மாற்றமாக மேம்படுத்தப்பட்ட மின் மோட்டார் உள்ளது. இதில் உள்ள 5kW திறன் கொண்ட மின்மோட்டார் அதிகபட்சமாக 202Nm டார்க்கை வழங்குகிறது. இதன் மூலம் 0-40 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேடான சாலைகள், மேம்பாலங்கள், மலைப்பாதைகள் மற்றும் கூடுதல் சுமையுடன் பயணிக்கும் போது சிறந்த இழுவைத்திறனை வழங்கும் வகையில் மோட்டார் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி
இந்த மின்சார ஸ்கூட்டரில் 3kWh LFP பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 136 கிமீ ரேஞ்ச் (IDC) வழங்கும் என ஆம்பியர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 93 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை Eco, City, Power மற்றும் Reverse ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.
வாரண்டி
பேட்டரியின் ஆயுட்காலம் 2 லட்சம் கிமீ வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆம்பியர் தெரிவித்துள்ளது. மேலும், பேட்டரிக்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ உத்தரவாதம் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் IP65 தரச்சான்று பெற்ற நீர் மற்றும் தூசி தடுப்புடன் கூடிய சார்ஜரும் இடம்பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வானிலை நிலைகளிலும் சார்ஜரை பயன்படுத்துவதற்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

சிறப்பு தொழில்நுட்ப வசதி
புதிய ஆம்பியர் Nexus EX+ மாடலின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக Intellipack என்ற புதிய இணைப்பு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை கூடுதலாக ரூ.6,000 செலுத்தி பெற முடியும். ஆம்பியர் கனெக்ட் செயலி மூலம் நிகழ்நேர சார்ஜிங் நிலை, நேரடி வாகன இருப்பிட கண்காணிப்பு, குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வாகனம் செல்லாதவாறு கட்டுப்படுத்தக்கூடிய Geo-fencing உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இணைப்பு வசதிகளைப் பெற முடியும்.
மேலும், பயணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள், சார்ஜிங் வரலாறு, பேட்டரி ஆரோக்கிய போன்ற வசதிகளும் Intellipack பதிப்பில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் வழக்கமான நகர்ப்புற பயன்பாட்டைத் தாண்டி, தினசரி நீண்ட தூரப் பயணங்களுக்கும் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு ஆம்பியர் முயற்சித்துள்ளது.

வண்ணத் தேர்வுகள்
புதிய நெக்சஸ் EX+ மாடல் Carbon Knight மற்றும் Steel Grey என இரண்டு வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய மாடலில் 6.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான LED விளக்குகள், 170மிமீ தரைத்தள உயரம் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன. இதன் விலை மற்றும் செயல்திறனை கருத்தில் கொள்ளும்போது, ரூ.1.3 லட்சம் விலைப்பிரிவில் உள்ள பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்களுக்கு இது போட்டியாக அமையும்.
ராணிப்பேட்டை ஆலை தயாரிப்பு
ராணிப்பேட்டையில் உள்ள ஆம்பியர் ஆலையில்தான் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெண் பணியாளர்களால் ஸ்கூட்டர் உற்பத்தி நடந்து வருகிறது. இதுதவிர, அந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications



