மிக மிகக் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ள நிறுவனம்
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமானது ஆம்பியர் (Ampere) பிராண்டின் கீழ் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. நம் கண் எதிரில் இருக்கும், ஆனால் அதிகம் பார்க்கப்படாத நிறுவனமாக இதனை நாம் கூறலாம். ஏனெனில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்று வரும் போது டாப் 5 நிறுவனங்களே பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
காரணம் இந்த ஐந்து நிறுவனங்கள் தான் அதிகம் வெளியே தெரிகின்றன. இவற்றுக்கு கொஞ்சம் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது கிரீவ்ஸ் மொபிலிட்டி. டாப் 5 நிறுவனங்களைப் போலவே இந்த கிரீவ்ஸ் மொபிலிட்டியின் ஆம்பியர் பிராண்டு எலெகட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் முன்னருடன் ஒப்பிடும் போது நன்றாகவே உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 6,884 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது இந்நிறுவனம். கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும் போது 70 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை இன்னும் அதிகரிக்க சமீபத்தில் தான் ஆம்பியர் ரியோ வைப் (Ampere Reo Vyb) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் குறைவான விலையில், பயன்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களுடன் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது.
வெறும் 69,499 ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ரியோ வைப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது ஆம்பியர். எனினும் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் இதனை ஒப்பிட முடியாது. ஏனெனில் இது குறைவான வேகம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். அதாவது மணிக்கு 25 கிமீ வேகத்திற்கு மேல் இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்ய முடியாது.

ஆனால் இதன் மற்ற அம்சங்கள் எல்லாமே முறையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு உண்டானதைப் போலவே இருக்கும். நகரங்களில் மிகவும் குறைவான தூரம் மட்டுமே பயணம் செய்யும் இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்களை மையப்படுத்தி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கிரீவ்ஸ் மொபிலிட்டி வெளியிட்டுள்ளது. மிகவும் குறைவான வேகத்திலேயே பயணம் செய்ய முடியும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் வாங்கத் தேவையில்லை. மேலும், RTO-விடம் பதிவு செய்யவும் வேண்டாம்.
ஸ்கூட்டரை வாங்க வேண்டியது தான், அப்படியே பயன்படுத்தத் தொடங்க வேண்டியது தான். பார்த்தவுடனேயே கண்களைக் கவரும் வகையிலான டிசைனையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. இதில் 1.44 kWh LFP பேட்டரி பேக் மற்றும் 0.25 kW பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஹப் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டார் அம்சக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சிங்கிள் சார்ஜில் 80 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது இதன் பேட்டரி பேக். 1 லட்சம் கிமீ வரை நீண்டு உழைக்கும் திறனுடன் இந்த பேட்டரி பேக்கை வடிவமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது கிரீவ்ஸ் மொபிலிட்டி. ஸ்கூட்டரின் முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் காயில் ஸ்பிரிங் செட்டப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கீலெஸ் ஸ்டார்ட், LED விளக்குகள், 24 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வரையிலான வாரண்டியையும் அந்நிறுவனம் அளிக்கிறது. வார்ம் ஒயிட், பேஸ்டல் பர்பிள், டார்க் கிரே மற்றும் அக்வா மெட்டாலிக் ஆகிய நான்கு தனித்துவமான நிறங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரை பெரியளவில் வாகனம் ஓட்டாதவர்களுக்கு அல்லது முதல் முறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இந்த ஆம்பியர் வைப் ரியோ சிறப்பான ஒரு தேர்வாக இருக்கும். குறைவான விலை கொண்ட மற்றும் குறைவான வேகம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும், மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் கிரீவ்ஸ் மொபிலிட்டி கொடுத்திருப்பது பாரட்டக்கூடியது. டிசைனும் முன்னணி ஸ்கூட்டர்களைப் போலவே கிளாஸியாக தனித்துவமாக இருப்பதை தனியே நாம் சொல்ல வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications