200 கி.மீ ரேஞ்ச்... ஆம்பியர் எலெக்ட்ரிக் பைக் ரெடி?
மின்சார இருசக்கர வாகன சந்தையில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆம்பியர் நிறுவனம், அடுத்ததாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவிலும் கால் பதிக்க தயாராகி வருகிறது. இதன் பகுதியாக அந்நிறுவனத்தின் ஸைபர் (Xyber) என்ற புதிய எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்தியாவில் காப்புரிமைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. அடுத்து மின்சார பைக் மார்க்கெட்டிலும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு டெல்லியில் நடந்த பாரத் குளோபல் எக்ஸ்போவில் ஸைபர் என்ற எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது.

அப்போதே இந்த பைக்கின் டிசைன் எல்லோரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. மேலும், இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், கான்செப்ட்டில் இருந்து அதிக மாற்றங்கள் இல்லாமல் தயாரிப்பு மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
வித்தியாசமான டிசைன்
வழக்கமான பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களைப் போல் இல்லாமல் டிசைன் மிகவும் வித்தியாசமாகவும், கேடிஎம் பைக்குகள் போன்ற சாயலுடன் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போல உள்ளது. குறிப்பாக, பெட்ரோல் டேங்க் இருக்கும் இடத்தில் வழக்கமான டேங்க் போன்ற அமைப்பு இல்லாமல், முன்புறம் முதல் பின்புறம் வரை நீளும் ஒருங்கிணைந்த பாடி வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட், தனித்துவமான டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சிறிய விங்லெட் போன்ற அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் X வடிவிலான எல்இடி டெயில் லைட், இரட்டை அமைப்புடன் இருக்கைகள் மற்றும் அகலமான டயர்கள் ஆகியவை பைக்கின் ஸ்போர்ட்டி தோற்றத்தை தூக்கலாக காட்டுகின்றன.
ரேஞ்ச்
இந்த பைக்கின் ரேஞ்ச்தான் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். ஸைபர் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்த பைக்கில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ ரேஞ்ச் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 100 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இது தோற்றத்தில் மட்டுமில்லாமல், நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கில் 10kW திறன் கொண்ட மிட்-மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டார் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் பின்புற சக்கரத்திற்கு செயின் டிரைவ் மூலம் சக்தியை வழங்கும் வகையில் கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் மோட்டார் வெப்பநிலையை கட்டுப்படுத்த மேம்பட்ட கூலிங் அமைப்பும் இடம்பெற வாய்ப்புள்ளது.
வசதிகள்
இந்த எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டில் சிறிய கிடைமட்ட TFT டிஸ்பிளே, புளூடூத் மூலமாக மொபைல்போன் இணைப்பு மற்றும் கூகுள் மேப் நேவிகேஷன் போன்ற வசதிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. தவிரவும், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் அகலமான டயர்கள் போன்ற பிரீமியம் அம்சங்களும் தயாரிப்பு நிலை மாடலில் வழங்கப்படலாம்.

எப்போது விற்பனை?
புதிய ஸைபர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை இல்லை. ஆனால், காப்புரிமை பெற்றிருப்பதால், இந்த பைக்கை தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக மேம்படுத்தும் அடுத்தக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. ரிவோல்ட், ஓபென் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் பைக்குகளுடன் இது போட்டி போடும்.
குறிப்பாக 200 கி.மீ வரை ரேஞ்ச் மற்றும் 10kW மோட்டார் ஆகியவை தயாரிப்பு மாடலிலும் இடம்பெற்றால், பிரீமியம் எலெக்ட்ரிக் பைக் சந்தையில் ஆம்பியர் நிறுவனத்திற்கு இது முக்கியமான மாடலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது, ராணிப்பேட்டையில் உள்ள ஆம்பியர் நிறுவனத்தின் ஆலையில்தான் இந்த பைக்கும் உற்பத்தி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications


