ஹோண்டா, சுஸுகி ஸ்கூட்டர்களுக்கு பதிலாக வாங்கலாம்! கலரை பார்த்தவுடனே எல்லாரும் வாங்கி போட போறாங்க!
ஏப்ரிலியா நிறுவனம் அதன் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களில் புதியதாக ட்ரிப்யூட் எடிஷன் என்கிற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இராணுவத்தினரின் மகத்தான பணிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புத்துணர்ச்சியான மேட் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபலமான பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் 2-வீலர் பிராண்ட், ஏப்ரிலியா ஆகும். இத்தாலி நாட்டை சேர்ந்த ஏப்ரிலியா பிராண்டில் இருந்து இந்தியாவிலும் ஸ்போர்டியான மற்றும் ஸ்டைலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஏப்ரிலியா SR ஸ்கூட்டர்கள் ஒன்றாகும். இந்தியாவில் 125சிசி மற்றும் 175சிசி என்ஜின்களுடன் ஏப்ரிலியா SR ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை இரண்டிற்கும் தான் தற்போது ட்ரிப்யூட் எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்கள் கம்பீரமான ஸ்டைல், ஏரோடைனாமிக் பாடி லைன்கள் மற்றும் பந்தய பைக்குகளுக்கு உண்டான கிராஃபிக்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஸ்கூட்டர்களின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள LED விளக்குகள் ஸ்கூட்டரின் தோற்றத்திற்கு மெருக்கேற்றக் கூடியவைகளாக மட்டுமின்றி கூடுதல் பிரகாசத்தையும் வழங்கக் கூடியவைகளாக உள்ளன.
இராணுவ வாகனங்களில் வழங்கப்படுவது போன்றதான கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஸ்கூட்டர்களை எவ்வளவு கூட்டத்திலும் தனியாக அடையாளம் காண முடியும். அதேநேரம், மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்களில் சற்று பெரியதாக 14 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சக்கரங்களில் ஆரஞ்சு நிறத்தில் ரிம்கள் வழங்கப்பட்டுள்ளதை படங்களில் காணலாம். புதிய ட்ரிப்யூட் எடிஷன்களின் தோற்றம் SR 125 மற்றும் SR 175 என இரு ஸ்கூட்டர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மற்ற அம்சங்களில் இந்த இரு ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
முக்கியமாக, SR 175 ஸ்கூட்டரில் 175சிசி-இல் பவர்ஃபுல்லான என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9.78 கிலோவாட்ஸ் மற்றும் 14.14 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 95கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய SR 175 ஸ்கூட்டரில் ஸ்போர்டியரான சத்தத்தை வெளியிடும் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படுகிறது.
ஏப்ரிலியா SR 175 ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் வழங்கப்படும் 5-இன்ச் TFT டிஜிட்டல் டிஸ்பிளேவில் நேரலையாக நேவிகேஷன் மற்றும் பயணங்கள் குறித்த விபரங்களை பெறலாம். மறுபக்கம், SR 125 பைக்கில் 124.45சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 3-வால்வு SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7.8 கிலோவாட்ஸ் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
என்ஜின் உடன் CVT கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதன் மூலமாக, இந்த ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 90கிமீ வேகத்தில் செல்லலாம். SR 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.11 லட்சத்தில் இருந்தும், SR 175 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.21 லட்சத்தில் இருந்தும் தற்சமயம் துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏப்ரிலியா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ட்ரிப்யூட் எடிஷன்களின் மூலமாக இந்தியாவில் ஏப்ரிலியா SR ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மெக்கானிக்கலாக இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications