ஸ்போர்ட்டியான புதிய ஸ்கூட்டரை தரமான அம்சங்களுடன் களமிறக்கிய நிறுவனம்!
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளில் ஸ்போர்ட்டியான மற்றும் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை ஏப்ரிலியா விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'SR GT ஸ்போர்ச் 200' ஸ்கூட்டர் மாடலினை தற்போது அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் என்னென்ன விதமான அம்சங்களைக் கொண்டுள்ளது, தற்போது இந்த வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
SR GT ஸ்போர்ட் 200 ஸ்கூட்டர் மாடலுக்கு தற்போது புதிய நிறத்தைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது ஏப்ரிலியா. புதிய நிறத்தைத் தவிர வேறெந்த வகையிலும் இந்த ஸ்கூட்டர் மாறவில்லை. ஆனால் அது பெரியளவில் குறைகளையும் பெறவில்லை. ஏனெனில் ஏற்கனவே நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் வசதிகள் கொண்ட ஸ்கூட்டர் மாடலாகவே இது அந்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெயரில் 200 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த ஸ்கூட்டரில் 174 சிசி இன்ஜினையே ஏப்ரிலியா பயன்படுத்தி வருகிறது. இந்த லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு இன்ஜினானது 8,500 rpm-ல் 17.4 hp பவர் மற்றும் 7,000 rpm-ல் 16.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பெல்ட் டிரைவ் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் SR 175 என்ற 175 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் மாடலை ஏப்ரிலியா விற்பனை செய்து வருகிறது. இது முன்னதாக அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த 160 சிசி இன்ஜின் ஸ்கூட்டரின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெரிய இன்ஜினாகும். மேலும் இந்த ஏர்-கூல்டு இன்ஜினின் பவர் மற்றும் டார்க் அளவுகளும் மேற்கூறிய லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய SR GT ஸ்போர்ட் 200 ஸ்கூட்டர் மாடலை தற்போது மூன்று தனித்துவமான நிறங்களில் வெளியிட்டுள்ளது ஏப்ரிலியா. ஸ்பேஸ் ஒயிட், சவாவா கிரே மற்றும் ஸ்ட்ரீட் கோல்டு ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டுள்ளது. இதில் கடைசியாக கூறிய ஸ்ட்ரீட் கோல்டு தான் முற்றிலும் புதிய நிறமாகவும், இந்த ஸ்கூட்டரை தனித்துக் காட்டும் நிறமாகவும் இருக்கிறது. மற்ற இரண்டும் ஏற்கனவே இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு வந்த நிறங்கள் தான்.
மேலே கூறியது போல இந்தக் கூடுதல் நிறத்தைத் தவிர புதிய ஸ்கூட்டரில மெக்கானிக்கலாகவும், வசதிகள் ரீதியாகவும் வேறெந்த மாற்றமும் வேறுபாடும் இல்லை. இது சற்று ப்ரீமியமான ஸ்கூட்டர் என்பதால், இதில் 120 மிமீ டிராவல் கொண்ட ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிலிட்டி கொண்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப்புகளைக் கொடுத்துள்ளது ஏப்ரிலியா.
ஸ்கூட்டரின் முன்பக்கம் 14 இன்ச் வீலுடன் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 13 இன்ச் வீலுடன் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 லிட்டர் எரிபொருள் டேங்கைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் 144 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் அனைத்து விளக்குகளையும் LED-யாகவே கொடுத்திருக்கிறது ஏப்ரிலியா. இத்துடன் மோனோகுரோம் LCD டிஸ்பிளேவும் உண்டு. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைவாக 765 மிமீ சீட் உயரத்தையும் இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
இந்த ஸ்போர்ட்டியான மேக்ஸி ஸ்கூட்டரை இந்திய மதிப்பிற்கு ரூ.3.79 லட்சம் என்ற விலையில் மலேசியாவில் விற்பனை செய்து வருகிறது ஏப்ரிலியா. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் அந்நிறுவனத்தின் SR 175 ஸ்கூட்டரானது ரூ.1.23 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்போர்ட்டியான SR GT ஸ்போர்ட் 200 ஸ்கூட்டரை ஏப்ரிலியா இந்தியாவிற்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனையில் இருந்தாலும் அதிகம் விற்பனை செய்யப்படுவது ஃபேமிலி ஸ்கூட்டர்கள் தான். எனவே ஸ்போர்ட்டியான லுக் கொண்ட ஸ்கூட்டர்களை நிறுவனங்கள் இந்தியாவிற்கு அதிகம் கொண்டு வருவது கேள்விக்குறி தான். தற்போதைய நிலையில் மிகவும் மேம்பட்ட மாஸ் மார்க்கெட் மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்று விற்பனையில் இருக்கிறதென்றால் அது யமஹாவின் ஏராக்ஸ் 155 தான். இந்த SR GT ஸ்போர்ட் 200 இந்தியாவில் வெளியானாலும் இதற்கு போட்டியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications