வெறும் ரூ.1.11 லட்சத்தில் புதிய அப்ரிலியா 'மேக்ஸி' ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய SXR GT என்ற புதிய மேக்ஸி ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த SXR 125 மற்றும் SXR 160 மாடல்களுக்கு மாற்றாக இந்த புதிய வரிசையில் ஸ்கூட்டர்கள் வந்துள்ளன. இதில் SXR GT 125 மற்றும் SXR GT 175 என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல்களுக்கு ஆரம்ப விலையாக ரூ.1.11 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவை நகரப் பயன்பாட்டுடன் நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற வகையில் ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
புதிய அப்ரிலியா SXR GT ஸ்கூட்டர்களின் டிசைன் இளைஞர்களையும், மேக்ஸி ஸ்டைல் மாடலை விரும்புவோரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, முந்தைய SXR மாடல்களில் 12 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய மாடல்களில் 14 அங்குல சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் ஸ்கூட்டரின் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், மோசமான சாலைப் பகுதிகளில் பயணிக்கும் போது கையாள்வதற்கு தோதுவாக இருக்கும்.

புதிய SXR GT 125 மாடலில் 124.5 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.6 எச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல் SXR GT 175 மாடலில் 174.7 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13.3 எச்பி பவரையும், 14.1 என்எம் டார்க்கையும் வழங்கும்.
இரண்டு மாடல்களிலும் மின்னணு கட்டுப்பாட்டு முறையில் செயல்படும் எரிபொருள் உட்செலுத்துதல் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவை BS6 OBD-II Stage B என்ற மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. E20 பெட்ரோலில் இயங்கும் வகையிலும் எஞ்சின் பாகங்கள் மற்றும் எரிபொருள் குழாய் அமைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, SXR வரிசையின் மேக்ஸி ஸ்கூட்டர் தோற்றம் புதிய மாடல்களிலும் தொடர்கிறது. முன்புறத்தில் அப்ரிலியாவின் தனித்துவமான டிரைப்பாட் என்ற தனித்துவமான எல்இடி ஹெட்லைட் அமைப்பு இடம்பெற்றுள்ளது. பெரிய தோற்றத்தை வழங்கும் முன்புற வடிவமைப்பு, உயரமான கண்ணாடி மற்றும் புதிய கிராபிக்ஸ் ஆகியவை ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.
புதிய SXR GT 175 மாடலில் 5 அங்குல TFT இன்ஸ்ட்ரூமென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் இணைப்பு மூலம் அழைப்புகள் மற்றும் இசையை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. வழிகாட்டும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு பொத்தான்கள் ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ளன. SXR GT 125 மாடலில் 5 இன்ச் LCD இன்ஸ்ட்ரூமென்ட் திரை கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களிலும் இரண்டு மாடல்களுக்கும் வித்தியாசம் உள்ளது. SXR GT 175 மாடலில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. SXR GT 125 மாடலில் அதே அளவிலான முன்புற டிஸ்க் பிரேக் இருந்தாலும், CBS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பின்புறத்தில் 140 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளன. பின்புற சஸ்பென்ஷனை ஐந்து நிலைகளில் மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது. இதனுடன் பெரிய கண்ணாடி, கிராஷ் கார்டு, டாப் பாக்ஸ் மற்றும் பெரிமீட்டர் கிட் போன்ற கூடுதல் உபகரணங்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.
வண்ணங்களைப் பொறுத்தவரை, SXR GT 125 மாடல் மேட் பிளாக், க்ளாஸி அஸ்ஸுரோ மற்றும் க்ளாஸி ஒயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. SXR GT 175 மாடல் மெட்டாலிக் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் மேட் கிரீன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதில், 175 சிசி மாடலில் கால்வைக்கும் பகுதியில் கூடுதல் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
புதிய அப்ரிலியா SXR GT 125 மாடலுக்கு ரூ.1.11 லட்சமாகவும், SXR GT 175 மாடலுக்கு ரூ.1.31 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களுக்குமான முன்பதிவு இந்தியாவில் உள்ள அனைத்து அப்ரிலியா டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications


