மிகவும் குறைவான விலையில் புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஆகஸ்ட்டில் அறிமுகமாகிறது
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி (Ather Energy, தற்போது அதிக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 'EL' என்ற புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த ஸ்கூட்டர் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்த புதிய மாடல் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ள Ather Community Day நிகழ்ச்சியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் கம்மியூனிட்டி டே என்ற நிகழ்வில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த இஎல்-01 என்ற கான்செப்ட் ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை மாடலாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய EL ஸ்கூட்டர், அளவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள Ather Rizta-வை ஒத்து இருக்கும். ஆனால், இதில் பிளாஸ்டிக் பேனல்களுக்கு பதிலாக மெட்டல் பாடி பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் நீண்ட கால பயன்பாட்டிலும் உறுதியான தரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட High Range மற்றும் Low Range என இரண்டு பேட்டரி தேர்வுகளில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முதல் கட்டத்தில் High Range வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. மற்ற வேரியண்ட்கள் பண்டிகை காலத்திற்குப் பிறகு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
புதிய EL பிளாட்ஃபார்ம், ஏத்தரின் தற்போதைய 450 சீரிஸை விட குறைந்த உற்பத்தி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் 2 kWh முதல் 5 kWh வரையிலான பேட்டரிகளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்விங் ஆர்மில் பொருத்தப்பட்ட மோட்டார், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், பின்புற மோனோஷாக், முன்புற டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக் போன்ற அமைப்புகளும் இதில் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
விலையைப் பொறுத்தவரை, இந்த ஸ்கூட்டர் Ather Rizta S Low Range மாடலை விட குறைவான விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதன் மூலம் TVS iQube, Bajaj Chetak, Ola Electric மற்றும் Hero Vida போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக இந்த புதிய ஏத்தர் ஸ்கூட்டர் அமையும்.
ஏதர் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் அல்லது விலையை அறிவிக்கவில்லை. இருப்பினும், மலிவு விலை, நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் பல்வேறு பேட்டரி தேர்வுகள் ஆகியவற்றுடன் வரும் இந்த புதிய EL ஸ்கூட்டர், இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏதரின் விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய தயாரிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 29ந் தேதி இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை துவங்க ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications