ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் வரும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!
இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னோடி நிறுவனமான ஏத்தர் இதுவரை இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்டியான வகை மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கி வந்தது. முதல்முறையாக அதிக வாடிக்கையாளர் வட்டத்தை கவரும் விதமாக, குறைவான பட்ஜெட்டில் EL01 என்ற பெயரில் புதிய குடும்ப பயன்பாட்டுக்கான ஸ்கூட்டர் மாடலை களமிறக்க உள்ளது.
வரும் 29ந் தேதி ஏத்தர் நிறுவனத்தின் கம்யூனிட்டி டே என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மின்சார ஸ்கூட்டரில் 10 முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. புதிய பிளாட்ஃபார்ம்
ஏத்தர் நிறுவனத்தின் புதிய ஏஎல்01 ஸ்கூட்டரை முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கி இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் உற்பத்திச் செலவை குறைத்து, குறைவான விலையில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏஎல்01 ஸ்கூட்டர் மட்டுமின்றி, எதிர்காலத்தில் பல புதிய ஸ்கூட்டர்களும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது. இதுவரை பல வாடிக்கையாளர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஏத்தர் ஸ்கூட்டர்கள், இந்த புதிய மாடல் மூலமாக அந்த ஆசையை நிறைவேற்ற முடியும்.
2. நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற மாடல்
தற்போது விற்பனையில் உள்ள ஏத்தர் 450X ஸ்கூட்டர் போன்று ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு பதிலாக, EL01 மிகவும் நடைமுறை பயன்பாட்டை கருத்தில் கொண்டு பாரம்பரியமான ஸ்கூட்டர் டிசைன் தாத்பரியங்களுடன் குடும்ப பயன்பாட்டு வகை மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டங்கள் மற்றும் டீசரில் உள்ள படங்களை வைத்து இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் அதிக வீல்பேஸ், அகலமான இருக்கை மற்றும் பெரிய ஃப்ளோர்போர்டு போன்றவற்றுடன் வருகிறது. இதனால் குடும்பத்தில் அனைவரும் தினசரி பயணங்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சவாலான விலை
ஏத்தர் நிறுவனத்தின் தற்போதைய 450 வரிசை மற்றும் ரிஸ்டா மாடல்களைவிட இந்த புதிய ஸ்கூட்டர் குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றைவிட இந்த ஸ்கூட்டர் குறைவான விலையில் வரும் என தெரிகிறது. அதாவது, ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்த ஸ்கூட்டர் வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய மாடலானது iQube, Bajaj Chetak மற்றும் Ola S1 X போன்ற மாடல்களை நேரடியாக குறிவைக்கிறது.
4. பேட்டரி ஆப்ஷன்கள்
ஏத்தர் நிறுவனத்தின் EL என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையானது 2 kWh முதல் 5 kWh வரை பல்வேறு திறன் கொண்ட பேட்டரிகள் மாடல்களை உருவாக்க முடியும் என்று ஏத்தர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நகரப் பயன்பாடு, நீண்ட ரேஞ்ச் மற்றும் பிரீமியம் மாடல்கள் என பல வகை வேரியண்ட்களை இந்த புதிய பிளாட்ஃபார்ம் மூலமாக ஏத்தர் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
5. புதிய மோட்டார் அமைப்பு
தற்போது சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வரும்போது வெளியான ஸ்பை படங்கள் மூலமாக ஏத்தர் நிறுவனத்தின் புதிய EL01 ஸ்கூட்டரில் பின்புற ஸ்விங் ஆர்மில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது பராமரிப்பை எளிதாக்குவதோடு, ஓட்டுதல் தரத்தையும் மேம்படுத்த உதவும். இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
6. சிறப்பான சஸ்பென்ஷன்
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அமைப்பு இடம்பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தினசரி நகரப் பயணங்களுக்கு இது சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. புதிய தொழில்நுட்ப வசதிகள்
வரும் ஆகஸ்ட் 29ந் தேதி நடைபெறும் ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல், புதிய மின்ணணு தொழில்நுட்பங்கள், சார்ஜிங் மற்றும் ஏத்தர் ஈக்கோசிஸ்டம் போன்றவை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும் என்று நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் மூலம் OTA அப்டேட்கள் மற்றும் சார்ஜிங் அனுபவத்தில் புதிய முன்னேற்றங்கள் வரலாம்.
8.போட்டியாளர்கள்
ஏத்தர் நிறுவனம் இதுவரை உயர்வகை மாடல்களை விரும்பும் வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து வர்த்தகம் செய்து வந்தது. தற்போது புதிய EL01 ஸ்கூட்டர் மூலமாக, இந்தியாவின் அதிக விற்பனையாகும் நடுத்தர விலை கொண்ட மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் நேரடியாக களம் இறங்குகிறது. இந்த மாடல் வெற்றி பெற்றால் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.
9. ஆகஸ்ட் 29ந் தேதி அறிமுகம்
ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சி வரும் 29ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்தான் EL Platform அடிப்படையிலான முதல் தயாரிப்பு ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. எனவே, இந்த ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
10. அதிக எதிர்பார்ப்பு
நடப்பு ஆண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சிறப்பானதாக அமைந்துள்ளதுடன் போட்டியும் மிகவும் தீவிரமடைந்துள்ளது. டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட பாரம்பரிய நிறுவனங்கள் வலுவாக முன்னேறி வரும் நிலையில், ஏத்தர் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு EL01 ஸ்கூட்டரை முக்கிய மாடலாக பார்க்கிறது. குறைந்த விலை, குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் ஏத்தர் நிறுவனத்தின் சிறந்த மென்பொருள் ஆகியவை இணைந்தால், இது நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனினும், விலை, ரேஞ்ச், சார்ஜிங் நேரம் மற்றும் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானால் மட்டுமே இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications