குவியும் ஆர்டர்கள்... ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க 4 மாதம் காத்திருக்கணுமா? உற்பத்தி நெருக்கடியால் சிக்கல்!
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி, ஆர்டர்கள் குவிந்து வருவதை சமாளிக்க முடியாமல் சப்ளை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்நிறுவனத்தின் பிரபலமான ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, சில நகரங்களில் ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான காத்திருப்பு காலம் 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், காத்திருப்பு காலம் நீள்வதை தவிர்க்கும் வகையில் சில ஏத்தர் டீலர்களில் புதிய முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குவியும் ஆர்டர்கள்
ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரிஸ்டா, நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஏத்தர் நிறுவனத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் சுமார் 90,000 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. ரூ.2,500 முன்பணம் செலுத்தி புக்கிங் செய்யும் வாய்ப்பை ஏத்தர் வழங்கி வருகிறது.
பொதுவாக முன்பதிவு செய்பவர்களில் 20 சதவீதம் அளவுக்கு ஆர்டரை ரத்து செய்வது வழக்கமான நடைமுறையாகும். இருந்தாலும், தற்போதைய முன்பதிவு மற்றும் டெலிவரி எண்ணிக்கையை ஒப்பிடும்போது, ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான உண்மையான சந்தைத் தேவை கணிசமாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டயில் ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா தெரிவித்துள்ளார்.
ரிஸ்டாதான் காரணம்
ஏத்தர் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க ரிஸ்டாவுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து வருவது முக்கிய காரணமாக உள்ளது. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 80 சதவீதம் வரை ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பங்குதான் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், 450S, 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் உள்ளிட்ட 450 சீரிஸ் மாடல்களுக்கும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் பல்வேறு மாடல்களுக்கான தேவையை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏத்தர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு இடையில் குறைந்த விலையில் கோனார்க் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஏத்தர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடலுக்கும் அதிக ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் சப்ளை நெருக்கடி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
முழு வீச்சில் ஓசூர் ஆலை
தற்போது ஏத்தர் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையமாக தமிழ்நாட்டின் ஓசூர் ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகபட்சமாக பயன்படுத்தி வந்தாலும், அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப உடனடியாக உற்பத்தியை உயர்த்துவது சவாலாக உள்ளது. இந்த நிலையை சமாளிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள ஆரிக் பகுதியில் புதிய உற்பத்தி ஆலையை ஏத்தர் அமைத்து வருகிறது.
புதிய ஆலையின் முதல் கட்ட உற்பத்தித் திறன் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் ஸ்கூட்டர்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் உடனடியாக முழு திறனில் உற்பத்தி தொடங்க இயலாது. உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து முழு திறனை அடைய 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம்.
முழு திறனில் செயல்படத் தொடங்கிய பின்னர், இந்த ஆலையில் இருந்து மாதத்திற்கு சுமார் 40,000 முதல் 42,000 கூடுதல் ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியும். மேலும், எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் மூலம் ஆலையின் மொத்த உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்தவும் ஏத்தர் திட்டமிட்டுள்ளது.
வெயிட்டிங் பிரீயட் எப்போது குறையும்?
மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலையின் உற்பத்தித் திறனை படிப்படியாக அதிகரிப்பதே ஏத்தர் நிறுவனத்தின் தற்போதைய சப்ளை நெருக்கடியை குறைக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏத்தர் நிறுவனத்தின் சப்ளை நிலைமை கணிசமாக மேம்பட வாய்ப்புள்ளது. அப்போது தற்போது காணப்படும் நீண்ட காத்திருப்பு காலமும் படிப்படியாக குறையக்கூடும்.
பண்டிகை காலத்தில் புதிய ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை தரலாம். எனினும், அருகிலுள்ள ஏத்தர் டீலரை தொடர்பு கொண்டு இருப்பு, டெலிவிரி கால அளவு உள்ளிட்டவற்றை தெரிந்துகொண்டு முன்பதிவு செய்வது தேவையற்ற ஏமாற்றத்தையும், பிரச்னைகளையும் தவிர்க்க உதவும்.
Source: TOI


Click it and Unblock the Notifications

