இவ்வளவு கம்மி விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் நிறுவனம்.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது ஏத்தர் தான். பெங்களூருவைத் சேர்ந்த இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஸ்டார்ட்-அப்பாகத் தொடங்கப்பட்டு தற்போது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. கடந்த மே மாதம் இந்தியாவில் சுமார் 28,211 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதம், அதாவது 2025 மே மாதத்துடன் ஒப்பிடும் போது இரட்டிப்பான விற்பனை அளவாகும். 2025 மே மாதம் 14,101 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்திருந்தது. தற்போது அது இரண்டு மடங்காகியிருக்கிறது.

மேலும், ஒரே மாதத்தில் இதுவரை ஏத்தர் விற்பனை செய்ததிலேயே இது இரண்டாவது அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்னர் இந்தாண்டு மார்ச் மாதம் தான் இதுவரை இல்லாத அளவிற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைப் பதிவு செய்திருந்தது ஏத்தர். அந்த மாதம் மட்டும் 36,333 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்திருந்தது ஏத்தர் எனர்ஜி.
மேலும் ஒரே மாதத்தில் 20,000 யூனிட்டுகளுக்கு மேலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைப் பதிவு செய்வது இது ஏத்தர் நிறுவனத்திற்கு ஏழாவது முறையாகும். விற்பனையை மேலும் அதிகரிக்க குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வருகிறது ஏத்தர். விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ரிஸ்டா, ஏத்தர் 450 மற்றும் 450 ஏபெக்ஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர் மாடல்களையே அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் 450 ஏபெக்ஸ் என்பது அனைத்து விதமான மேம்பட்ட மற்றும் உயர்தர வசதிகளுடன் அதிக ரேஞ்சையும் கொண்டு அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏத்தர் 450 என்பது ஏபெக்ஸ் ஸ்போர்ட்டியான ஆனால் சற்று குறைவான விலை கொண்ட ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரிஸ்டா தான் குறைவான விலையில் ஏத்தரின் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. 1.15 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படும் இந்த ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். கடந்த மே மாதம் தான் 3 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியது ஏத்தர் ரிஸ்டா. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டிற்குப் பின்பு தான் இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விற்பனையில் இருக்கும் இந்த ஸ்கூட்டர்களைக் கடந்து முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஏத்தர் எனர்ஜி உருவாக்கி வருகிறது. மிகவும் குறைவாக 1 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் முதலிரண்டு இடங்களில் இருக்கும் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கு போட்டியாக வரவும் நினைக்கிறது ஏத்தர் எனர்ஜி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டார்ட்-அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு தற்போது நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது ஏத்தர். ஓலா போல வேக வேகமாக புதிய தயாரிப்புகளை அறிவித்துவிட்டு, அதனை சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் திணறாமல், பொறுமையான வழிமுறையையே கடைப்பிடித்து வந்தது ஏத்தர். ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த பொறுமைக்குப் பரிசளித்து தற்போது அதனை உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி இப்போது குறையும் ஒரு இடம் விலை தான். 1 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பட்சத்தில் கண்டிப்பாக மற்ற நிறுவனங்களை விடவும் அதிக விற்பனையை அந்நிறுவனம் பதிவு செய்யும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை.


Click it and Unblock the Notifications