ராணுவ வீரர்களுக்கு குட் நியூஸ்.. CSD கேன்டீன் மூலம் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!!
வரும் செப்டம்பர் முதல் ராணுவ கேன்டீன் (CSD) மூலமாக ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான ஒப்புதல்களை ஏத்தர் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் பணியில் இருக்கும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தகுதியானவர்களுக்கு ஏத்தர் ஸ்கூட்டர்களை இந்த ராணுவ கேன்டீன் மூலமாக வாங்க முடியும்.
ராணுவத்தினருக்கான சிறப்பு விலையில் ராணுவ கேன்டீன் மூலமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பல்வேறு நிறுவனங்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. டீலர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விற்பனை செய்யப்படுவதை விட இந்த கேன்டீனில் குறைவான விலையில் வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனமும் ராணுவ கேன்டீன் மூலமாக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதற்கான ஒப்புதல்களையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது. ராணுவ கேன்டீன் மூலமாக தனது 450 மற்றும் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் 8 வேரியண்ட்டுகளை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இதில் 450 சீரிஸின் பெர்ஃபார்மன்ஸ் மாடல்களும், குடும்ப பயன்பாட்டை மையமாகக் கொண்ட ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் இடம்பெறுகின்றன.
அதேநேரத்தில், ஏத்தர் நிறுவனத்தின் அதிக செயல்திறன் கொண்ட 450 Apex மாடல் ராணுவ கேன்டீன் விற்பனை பட்டியலில் இடம்பெறவில்லை. ராணுவ கேன்டீன் மூலம் வாகனம் வாங்குவதால் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் கிடைக்கும். இதற்கு மேலாக, ராணுவ கேன்டீன் மூலமாக ஏத்தர் ஸ்கூட்டர் வாங்கும் ராணுவத்தினருக்கு நிறுவனம் சார்பிலும் கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
ஷோரூம்களைவிட இந்த ராணுவ கேன்டீனில் ஏத்தர் 450எக்ஸ் மாடல்களுக்கு வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.8,500 முதல் ரூ.9,500 வரையிலும், ரிஸ்டா ஸ்கூட்டருக்கு வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு ரூ.7,000 முதல் ரூ.9,000 வரையிலும் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 6 சதவீதம் வரை ஆன்ரோடு விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது. ஏத்தர் நிறுவனம் தள்ளுபடி வழங்கினால், அதிகபட்சமாக ரூ.20,000 வரையிலும் விலை குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பெட்ரோல், டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை ராாணுவ கேன்டீனில் வரி தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பொதுவாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஏத்தர் ஸ்கூட்டர்களின் விலையி்ல் பெரிய அளவில் குறையும் வாய்ப்பு இருக்காது. அதேநேரத்தில், ஏத்தர் நிறுவனம் கூடுதல் தள்ளுபடி வழங்கினால் ரூ.20,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்போது எவ்வளவு சேமிப்பு பெற முடியும் என்பது விரிவாக தெரிய வரும்.
இதனால், வழக்கமான ஷோரூம் விலையுடன் ஒப்பிடும்போது இந்த ராணுவ கேன்டீனில் உறுப்பினர் அட்டை வைத்துள்ள தகுதியான ராணுவத்தினருக்கு குறைவான விலையில் ஏத்தர் ஸ்கூட்டரை வாங்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு வேரியண்ட்டிற்கான CSD விலை மற்றும் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல்களை ஏத்தர் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
ராணுவ கேன்டீன் தளத்தில் ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை வரும் செப்டம்பர் முதல் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, தனது விற்பனை வலையை விரிவுபடுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையை ஏத்தர் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேர்வு செய்ய விரும்பும் ராணுவத்தினருக்கு CSD வாயிலாக ஏத்தர் ஸ்கூட்டர்களை வாங்கும் வாய்ப்பு கிட்ட உள்ளது.


Click it and Unblock the Notifications

