நம்ம மொழிக்கு கிடைத்த பெருமை... 2 லட்சம் பேர் யூஸ் பண்ணும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தமிழ்!
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி லிமிடெட் (Ather Energy), தனது பிரபலமான ஃபேமிலி ஸ்கூட்டரான ரிஸ்டா இசட் (Rizta Z)-இன் டேஷ்போர்டை தமிழ் மொழியிலும் பயன்படுத்தும் வசதியை பொங்கல் (Pongal) பண்டிகை முதல் அறிமுகம் செய்வதாக இன்று (ஜன.12) அறிவித்துள்ளது.
இந்த புதிய அம்சம், தமிழ் பேசும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ரிஸ்டா இசட் (Rizta Z) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இன்னும் எளிதாகவும், இயல்பாகவும் தொடர்பு கொள்ள உதவும். இந்த புதுப்பிப்பு, வருகிற 2026 பிப்ரவரி முதல் படிப்படியாக ஓவர்-தி-ஏர் அப்டேட் (OTA Update) வழியாக அனைத்து ரிஸ்டா இசட் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

அதாவது, ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்களுக்கு கூட சிஸ்டம் அப்டேட்டாக இந்த அம்சம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு, ரிஸ்டா ஸ்கூட்டருக்கான பல மொழி கொண்ட டேஷ்போர்டு இண்டர்ஃபேஸ் (Interface)-ஐ ஏத்தர் அறிவித்தது. இந்த இண்டர்ஃபேஸ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என எட்டு பிராந்திய மொழிகளை ஆதரிப்பதன் மூலம் பரந்த பார்வையாளர்களை சென்றடைகிறது.
இந்தி மொழியில் துவங்கி, சமீபத்தில் கன்னடம் இணைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தமிழ் மொழிக்கான அறிமுகம் திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர்த்த மற்ற மொழிகள் வரும் மாதங்களில் வழங்கப்படும். ஏத்தரின் முதல் ஃபேமிலி ஸ்கூட்டரான ரிஸ்டா, இரண்டு மாடல்கள் மற்றும் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. ரிஸ்டா எஸ் (S) மற்றும் ரிஸ்டா இசட் என்பன அந்த இரு மாடல்கள் ஆகும்.

இந்த மாடல்கள் இரண்டும் 123 கி.மீ மற்றும் 159 கி.மீ ரேஞ்சை வழங்கும் வேரியன்ட்களில் வழங்கப்படுகின்றன. ரிஸ்டா ஒரு பெரிய, வசதியான இருக்கையையும், 56 லிட்டர் ஸ்டோரேஜ் இடத்தையும் கொண்டுள்ளது. இதில் இருக்கைக்கு அடியில் 34 லிட்டர் மற்றும் கூடுதல் ஆப்ஷனாக 22 லிட்டர் ஃபிரங்க் ஸ்டோரேஜ் பகுதியும் அடங்கும்.
மேலும், ரைடர் கால் வைத்துக் கொள்ள போதுமான இடவசதியுடன் விசாலமான ஃப்ளோர் போர்டும் இதில் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களில், ரிஸ்டா பல மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இதில் ஸ்கிட் கண்ட்ரோல்TM, லைவ் லொகேஷன் ஷேரிங் வசதிகள் உள்பட கூட்டத்தில் இருக்கும் ஸ்கூட்டரின் விளக்குகளை ஒளிர செய்து அல்லது இசையை ஒலிர செய்து அடையாளம் காணும் வசதியும் அடங்குகிறது.

ஆனால், இந்த வசதி ரிஸ்டா இசட் ஸ்கூட்டரில் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், ரிஸ்டாவின் இரு வேரியண்ட்களிலும் ஸ்கூட்டர் கீழே விழுந்தாலோ அல்லது மிகவும் சாய்ந்தாலோ மோட்டார் தானாக ஆஃப் ஆகும் வசதி, அவசர காலத்தில் சடர்ன் பிரேக் கொடுத்தால் அதனை பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் டெயில்லைட்டை விட்டு விட்டு ஒளிர செய்யும் வசதி மற்றும் டோ & திருட்டு எச்சரிக்கைகள் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாடு ஏத்தருக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையே தமிழ்நாட்டின் ஓசூரில் தான் உள்ளது. அதேநேரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வளர்ந்துவரும் மார்க்கெட்டிற்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் உண்டு. ரிஸ்டா ஸ்கூட்டர் சிறப்பான வரவேற்பைப் பெற்று, சமீபத்தில் 2 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது.

இன்றைய டிஜிட்டல் உலகில், மக்கள் தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்பத்துடன் உரையாடவே அதிகம் விரும்புகிறார்கள். இந்த போக்கைக் கருத்தில் கொண்டு, ரைடர்கள் தங்கள் ஸ்கூட்டர்களை மிகவும் சௌகரியமான மொழியில் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்க ஏத்தர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறான OTA அடிப்படையிலான மேம்பாடுகளை நிறுவனம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications









