ஏத்தரின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகியது.. இந்தியாவிலேயே முதல் முறை இது தான்!
இன்று தங்களுடைய லைன்-அப்பில் 450 சீரிஸ், ரிஸ்டா எனப் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஏத்தர் வைத்திருக்கிறது. ஆனால் இதற்கான விதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018ல் போடப்பட்டது. தற்போதைய முன்னணி நிறுவனங்களில் முதன் முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது ஏத்தர் எனர்ஜி தான். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடப் போகிறது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், தங்களுடை முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018ம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தான். அந்த வகையில் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அதிகாரப்பூர்வமாக ஏத்தர் எனர்ஜி கால் பதித்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றும் கூறலாம்.

அன்று அந்நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வெளியிட்டது. ஒன்று 340 மற்றும் இப்போதும் விற்பனையில் இருக்கும் 450. 340 தான் அதிகாரப்பூர்வமாக ஏத்தரின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ஏனெனில் இதனைத் தான் பல்வேறு இடங்களிலும் வெளியீட்டிற்கு முன்பு அந்நிறுவனம் காட்சிப்படுத்தி வந்தது. 340-யின் மேம்பட்ட, அதிக ரேஞ்சு கொண்ட வெர்ஷனாகவே 450-யும் அன்றைய தினம் வெளியானது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற ஒன்று பெரிதாக அறிமுகமில்லாத அந்த நேரத்தில் ஏத்தரின் இந்தப் புதிய தயாரிப்பு தனித்துவமாகப் பார்க்கப்பட்டது. நிறைய வாடிக்கையாளர்கள் அப்போது ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கத் தயாராக இல்லையென்றாலும், இதன் மேல் ஆர்வம் மட்டும் அவர்களுக்கு இருந்தது. மேலும், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றே இவற்றை அப்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறிப்பிட்டது.

ஏத்தர் 340 மாடலானது அப்போது வெறும் 60 கிமீ என்ற தினசரிப் பயன்பாட்டு ரேஞ்சுடன் வெளியிடப்பட்டது. இது எக்கானமி மோடில். பவர் மோடில் ரேஞ்சு வெறும் 50 கிமீ தான். அதேபோல் 450 மாடலானது எக்கானமி மோடில் 75 கிமீ ரேஞ்சையும், பவர் மோடில் 60 கிமீ ரேஞ்சையும் கொடுக்கும் திறனுடன் வெளியிடப்பட்டிருந்தது. தற்போதிருக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 161 கிமீ ரேஞ்சைக் கொடுக்கும் திறனுடன் கூடிய பேட்டரிக்களைக் கொண்டிருக்கின்றன.
இப்போதிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் அப்போது மிகச்சிறிய பேட்டரி பேக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. 340-யில் 1.92 kWh பேட்டரி பேக்கையும், 450-யில் 2.4 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது 2.4 kW பேட்டரி பேக் பயன்பாட்டிலேயே இல்லை. குறைந்தபட்சம் 2.9 kWh பேட்டரி பேக் தான் ஏத்தரில் உள்ளது. டாப் எண்டு வேரியன்ட்களில் 3.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
340 ஸ்கூட்டரை 1.13 லட்சம் என்ற விலையிலும், 450 ஸ்கூட்டரை 1.24 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் இந்த ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இவை வெளியிடப்பட்ட ஒரே ஆண்டிலேயே 340 ஸ்கூட்டரின் விற்பனையை நிறுத்தியது ஏத்தர். அதிக ரேஞ்சு கொண்ட 450 வேரியன்டையே பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் விரும்பியதால், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 99 சதவீதம் வாடிக்கையாளர்கள் விரும்பியதால், 340-யின் விற்பனையை நிறுத்தியது.
அங்கே தொடங்கி தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 6 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ஏத்தர் எனர்ஜி. சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த விற்பனை மைல்கல்லை அந்நிறுவனம் எட்டியது. மேலும், டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் மூன்றாவது நிறுவனமாகவும் உருவெடுத்திருக்கிறது ஏத்தர்.
விரைவில் குறைவான விலையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 1 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏத்தரின் விற்பனையை இன்னும் சற்று உயர்த்தி முதலிடத்தைப் பிடிக்கக் கூட உதவி செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொறுமையும் நிதானமும் தான் ஏத்தரின் ஸ்டைல். மற்ற நிறுவனங்கள் அதிக விற்பனையைப் பதிவு செய்த போதிலும், குறைவான விலையில் அவசர அவசரமாக புதிய தயாரிப்புகளை களமிறக்க அந்நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. மாறாக தரமான தயாரிப்புகளையே தொடர்ந்து மேம்படுத்தி வந்தது. அதன் பலனை இப்போது அந்நிறுவனம் அறுவடை செய்து வருகிறது. இங்கே விற்பனை அல்ல முதல்படி, மக்களின் நம்பிக்கையைப் பெறுவது தான் முதல்படி, அதன் பின்பு தான் எல்லாம்.


Click it and Unblock the Notifications