ஸ்கூட்டரை சர்வீஸ் செய்ய அலைய வேண்டிய அவசியம் இல்ல! ஓசூரில் ரெடியாகும் ஸ்கூட்டருக்கு நாடு முழுக்க சென்டர்ஸ்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூருவை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவுக்கு அருகே தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் மெல்ல மெல்ல ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஹீரோ விடா (Hero Vida) நிறுவனங்களை எல்லாம் முந்திக்கொண்டு இந்தியாவின் 3வது பெரிய இவி 2-வீலர் நிறுவனமாக விளங்குகிறது.
கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனைப்படி பார்த்தால், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) என்கிற இரு 2-வீலர் ஜாம்பவான்கள் மட்டுமே ஏத்தருக்கு முன்னால் உள்ளன. கடந்த பிப்ரவரி என்கிற ஒரே மாதத்தில் சுமார் 20 ஆயிரத்து 500க்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்துள்ளது. விற்பனையில் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஷோரூம்களை அமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

வரும் மாதங்களில் விற்பனையை மேலும் பெருக்க வேண்டும் என்றால் நாடு முழுவதும் உள்ள மக்களை அணுகும் வகையில் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் (Sales & Service Network) இருக்க வேண்டும். முக்கியமாக, சர்வீஸ் நெட்வொர்க் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் வாகனத்தை வாங்கிய கஸ்டமர் மீண்டும் ஒரு வாகனத்தை வாங்குவார் மற்றும் பிறருக்கும் பரிந்துரைப்பார்.
இதனை நன்கு புரிந்து வைத்துள்ள ஏத்தர் எனர்ஜி, நாடு முழுவதும் திறந்துள்ள சர்வீஸ் மையங்களின் எண்ணிகையில் 500 என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில், 277இல் இருந்த சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 500 ஆக ஏத்தர் எனர்ஜி அதிகரித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட டபுள் மடங்காக அதிகரித்துள்ளது.

இங்கு வழக்கமான சர்வீஸ்களை வழங்குவதுடன், 60-நிமிட கால பராமரிப்பு சேவை என்கிற பெயரில் வெறும் 60 நிமிடங்களில், அதாவது 1 மணிநேரத்தில் முழு ஸ்கூட்டரையும் சரிப்பார்த்து சிறு, சிறு பழுதுகளை ஏத்தர் சர்வீஸ் செண்டர்கள் சரிப்பார்த்து தருகின்றன. ஆனால், இந்த 60-நிமிட பராமரிப்பு சேவை ஆனது தற்போதைக்கு 82 ஏத்தர் சர்வீஸ் மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இவ்வாறு சர்வீஸ் மையங்களை அதிகரிப்பதுடன், ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான எக்ஸ்பீரியன்ஸ் ஷோரூம்களையும் ஏத்தர் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, முக்கிய மாநகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்கும் முனைப்பில் ஏத்தர் எனர்ஜி உள்ளது. 2025 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 600 எக்ஸ்பீரியன்ஸ் ஷோரூம்களை கொண்டிருந்த ஏத்தர் எனர்ஜி, இந்த மார்ச் மாதத்திற்குள் அதனை 700 ஆக அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது.
அதேபோல், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக ஏத்தர் கிரிட் (Ather Grid) என்கிற பெயரிலான ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. 2025 டிசம்பர் 31 நிலவரப்படி, மற்ற கூட்டணி நிறுவனங்கள் மூலம் அமைத்த சார்ஜர்கள் உள்பட மொத்தம் 4,357 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் '450' என்கிற செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எப்போது ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதோ அப்போதே அதன் மார்க்கெட் பெரியதாகிவிட்டது. ஏனெனில், குறைந்த விலையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஃபேமலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வளர்ச்சி மிக பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கிய காரணம் என்றாலும், இவ்வாறு சர்வீஸ் நெட்வொர்க்கை ஏத்தர் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருவதும் கூட முக்கிய பங்காற்றுகிறது.


Click it and Unblock the Notifications








