ஸ்கூட்டரை ஏற்கனவே வாங்கிவிட்டாலும் பரவாயில்லை... டிராஃபிக்கில் அடிக்கடி நிறுத்தி செல்ல வேண்டிய கவலை இனி இல்லை!
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி லிமிடெட் (Ather Energy Limited), தனது ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 'இன்ஃபினிட் க்ரூஸ்' (Infinite Cruise) என்கிற சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் மென்பொருள் சார்ந்த அம்சங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொழிற்நுட்ப அம்சத்தை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு அதன் 450எக்ஸ் ஆனது முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. சற்று விலைமிக்க, அதேநேரம் அதற்கேற்ப செயல்படுதிறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் 450எக்ஸ் -இல் புதிய இன்ஃபினிட் க்ரூஸ் ஆனது ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட் மூலம் கிடைக்கும்.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் நிலையான அம்சமாக வழங்கப்படவுள்ள இந்த அப்டேட் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரின் டேஷ்போர்டில் ஒரு அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படும் என ஏத்தர் எனர்ஜி தெரிவித்துள்ளது. 'இன்ஃபினிட் க்ரூஸ்' அம்சம் முதலில் 2025 ஆகஸ்ட் அன்று நடைபெற்ற ஏத்தர் சமூக தின விழாவில் ஏத்தர் அபெக்ஸ் 450 (Apex 450) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சாலைப் போக்குவரத்து நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த தொழிற்நுட்பம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்புகள் நெடுஞ்சாலையில் அதிவேக பயணத்திற்காக வடிவமைக்கப்படும் நிலையில், 'இன்ஃபினிட் க்ரூஸ்' அன்றாட நகரப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மற்றும் சீரற்ற சாலைகளில் அடிக்கடி ஸ்கூட்டரின் வேகத்தை மாற்றிக் கொண்டு, மணிக்கு 30கிமீ-க்கும் குறைவான வேகத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலைகளில் இந்த தொழிற்நுட்பம் மிகவும் அவசியமாகிறது.

வழக்கமான க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்புகள் பிரேக் பிடித்தாலோ அல்லது ஆக்சிலரேட் செய்தாலோ செயல் இழந்திடும். ஆனால், 'இன்ஃபினிட் க்ரூஸ்' அம்சம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. ஒருமுறை செயல்படுத்தப்பட்டால், இந்த அமைப்பு ஓட்டுநரின் உள்ளீடுகளுக்கு ஏற்ப தானாகவே சரிசெய்து, புதிய வேகத்திற்குத் தகுந்தாற்போல் மீண்டும் சரிசெய்துக் கொள்ளும்.
இது பிரேக்கை மீண்டும் மீண்டும் செயல்படுத்த வேண்டிய தேவையை நீக்குகிறது. இதன் மூலம், ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலிலும் குறைந்த த்ரோட்டில் பயன்பாட்டுடன், சோர்வின்றி பயணிக்க முடியும். ஸ்கூட்டர் 10 கி.மீ முதல் 90 கி.மீ வரையிலான எந்த வேகத்தில் இயங்கினாலும், 'இன்ஃபினிட் க்ரூஸ்' செயல்பாட்டிற்கு வரும். இந்த தொழிற்நுட்ப அம்சத்தில் 'சிட்டி க்ரூஸ்' அம்சமும் உள்ளது.

இது போக்குவரத்து வேக மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். மேலும், 'ஹில் கண்ட்ரோல்' என்கிற அம்சமானது ஏற்ற, இறக்கமான சாலைகளில் நிலையான வேகத்தை பராமரிக்க, ஸ்கூட்டர் சுமக்கும் எடை வித்தியாசங்களை ஈடுசெய்து, ஏத்தரின் மேஜிக் பிரேக்கிங் செயல்பாடு மூலம் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்துகிறது. மேலும், இன்ஃபினிட் க்ரூஸ் தொழிற்நுட்பத்தில் உள்ள 'க்ரால் கண்ட்ரோல்' ஆனது கரடுமுரடான மற்றும் சீரற்ற சாலைகளில் நிலையான குறைந்த வேகப் பயணத்திற்கு உதவுகிறது.
ஈரமான மற்றும் வழுக்கும் பரப்புகளில் சிறந்த பிடிமானத்திற்காக மல்டிமோட் டிராக்ஷன் கண்ட்ரோல் இதற்கு ஆதரவாக உள்ளது. ஏத்தர் நிறுவனம் தங்கள் ஸ்கூட்டர் உரிமையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் 450எக்ஸ் ஸ்கூட்டர்களை வாங்கிய 44,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு 'இன்ஃபினிட் க்ரூஸ்' அம்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை பெங்களூருவில் தற்சமயம் ரூ.1,47,998 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 2013 ஆம் ஆண்டில் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்ட ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 450 சீரிஸ் (செயல்திறன் சார்ந்தது) மற்றும் 2024இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரிஸ்டா (குடும்ப பயன்பாட்டிற்கானது) என இரு தயாரிப்புகளுடன் செயல்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'மல்டி மோட் டிராக்ஷன் கண்ட்ரோல்' மற்றும் 'மேஜிக் ட்விஸ்ட்' ஆகியவற்றுடன் இணைந்த 'இன்ஃபினிட் க்ரூஸ்', நகரப் பயணங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், சுறுசுறுப்பானதாகவும் மாற்றுகிறது. இது ஏத்தர் 450 ஸ்கூட்டரில் க்ரூசிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. ஏத்தர் தனது ஸ்கூட்டர்களை ஒரு மேம்படும் தயாரிப்புகளாக உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications









