ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏகோபித்த வரவேற்பு... ஒரே நாளில் 500 ஸ்கூட்டர்கள் டெலிவரி!
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டெல்லியில் ஒரே நாளில் 500 கோனார்க் (Konarc) மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தி உள்ளது. கடந்த 25ந் தேதி நடைபெற்ற இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்று புதிய ஸ்கூட்டர்களை மகிழ்ச்சியுடன் டெலிவிரி பெற்றுச் சென்றனர்.
வட இந்தியாவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாக டெல்லி விளங்குகிறது. இங்கு மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வாகன விற்பனை மற்றும் சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi NCR) ஏத்தர் நிறுவனத்திற்கு 17 விற்பனை மையங்களும், 209 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களும் உள்ளன.

சிறப்பம்சங்கள்
ஏத்தர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர் இந்திய சாலைகளின் நிலைமைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு புக்கிங் செய்து வருகின்றனர். குறிப்பாக, பயணத்தின்போது நிலைத்தன்மை, சவுகரியம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பக்கத்தில் 14 அங்குல அலாய் வீலும், பின்பக்கத்தில் 12 அங்குல அலாய் வீலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வெவ்வேறு சாலை நிலைகளில் ஸ்கூட்டரை எளிதாகக் கையாள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் வீல்பேஸ் 1,352 மிமீ நீளமாக உள்ளது. மேலும், முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் நீண்ட பயணத் தூரத்தைக் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சீரற்ற சாலைகளில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கு மேம்பட்ட சவுகரியத்தை வழங்கும்.
கோனார்க் மாடலில் ஸ்டீல் பாடி பேனல்கள் மற்றும் ஸ்டீல் யூனிபாடி சேஸிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஏத்தர் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் இந்த அம்சங்களைப் பெறும் முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் சீக்வென்ஷியல் கியர் டிரைவ் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மென்மையான மற்றும் குறைந்த சத்தத்துடன் கூடிய ஆற்றல் பரிமாற்றத்தை மோட்டாரிலிருந்து சக்கரத்திற்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரேஞ்ச் விபரம்
ஏத்தர் கொனார்க் ஸ்கூட்டர் S மற்றும் Z என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்கூட்டரின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகள், இந்திய ஓட்டுனர் நிலைமைகளுக்கான சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் (IDC) கணக்கீட்டின்படி, ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ வரை செல்லும் திறனை கொண்டுள்ளன.
இதில் ஐந்தாம் தலைமுறை பெட்ராக் (Bedrock) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு நிறுவனம் 10 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வரை உத்தரவாதம் வழங்குகிறது. உத்தரவாதக் காலத்தின் முடிவில் பேட்டரியின் திறன் நிலை(State of Health) குறைந்தபட்சம் 70 சதவீதமாக இருக்கும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பராமரிப்புச் செலவைக் குறைக்க திட்டம்
கோனார்க் ஸ்கூட்டர் மாடலானது ஒவ்வொரு 10,000 கிமீ பயணத்திற்கும் ஒருமுறை பராமரிப்புச் சேவையை மேற்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயனர்களுக்கு இது ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு மேற்கொள்வதற்கு இணையாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பராமரிப்பு கால அளவு என்பது பயணத் தூரம் அடிப்படையில் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், ஒரே நாளில் 500 ஸ்கூட்டர்களை டெலிவரி செய்திருப்பது ஏத்தர் கோனார்க் மாடலுக்கான வரவேற்பை காட்டுகிறது. ரேஞ்ச், பேட்டரி உத்தரவாதம், சவுகரியம் மற்றும் பராமரிப்பு இடைவெளி போன்ற அம்சங்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. அதே நேரத்தில், வாடிக்கையாளர்களின் நீண்டகால அனுபவமும், சார்ஜிங் வசதிகளின் விரிவாக்கமும் இந்த மாடலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும்.


Click it and Unblock the Notifications


