நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... பட்ஜெட் ஏத்தரின் பெயர் வெளியானது!!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குறைவான விலை ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக EL01 என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்யப்பட்டு வந்த இந்த புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் கோனார்க் (Ather Konarc) என்று பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா எக்ஸ் தளத்தின் மூலமாக டீசர் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். "ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் இந்த புதிய டீசர் மற்றும் பெயரை அவர் வெளியிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 29ந் தேதி பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏத்தர் கம்யூனிட்டி டே என்ற வருடாந்திர நிகழ்ச்சியில் இந்த புத்தம் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்ட உள்ளது. ஏத்தர் நிறுவனம் உருவாக்கி உள்ள புதிய கட்டமைப்புக் கொள்கையில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் வர இருக்கிறது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏத்தர் நிறுவனத்தின் 450 மற்றும் Rizta-வுக்கு கீழே இருக்கும் புதிய பட்ஜெட் பிரிவை குறிவைத்து விற்பனை செய்யப்படும். முதல்முறையாக அதிகம் விற்பனையாகும் குடும்ப பயன்பாட்டு வகை மாடலாக இந்த கோனார்க் நிலைநிறுத்தப்படும். இது ஏத்தர் நிறுவனத்தின் ரூ.1 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டீசர்களைப் பார்க்கும்போது, நகரப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும், ரேஞ்ச், பேட்டரி, செயல்திறன், விலை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

எனினும், இந்த புதிய ஸ்கூட்டர் 2kWh முதல் 5kWh என பல்வேறு பேட்டரிகளை சப்போர்ட் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன்மூலமாக பல்வேறு மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளில் புதிய மாடல்களை ஏத்தர் வெளியிடும் என தெரிகிறது.

புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்பது தெரிய வருகிறது. டீசர்கள் மூலமாக இதன் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நகரப்பயன்பாட்டிற்கு மிகவும் சரியானதாக அமையும். வரும் 29ந் தேதி இந்த ஸ்கூட்டர் குறித்து அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பண்டிகை கால பட்டியலில் இந்த புதிய மாடல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கும் மாடலாக இருக்கிறது.

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் குடும்ப பயன்பாட்டு மாடல்களுக்கு தற்போது அதிக தேவை நிலவி வருகிறது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஹீரோ விடா விஎக்ஸ்2 போன்ற மாடல்கள் இந்த பிரிவில் போட்டியிடும் நிலையில், கோனார்க் மூலம் அந்த சந்தையில் தனது பங்கை மேலும் அதிகரிக்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
