200கிமீ ரேஞ்ச்... குறைவான விலை புதிய ஏத்தர் ஸ்கூட்டர் குறித்து கசிந்த முக்கியத் தகவல்கள்!!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் வரும் 29ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரின் பேட்டரி, வேரியண்ட்டுகள் குறித்த பல முக்கியத் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
டீம் பிஎச்பி வெளியிட்டுள்ளத் தகவல்களின்படி, புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் புதிய EL பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மொத்தமாக ஆறு வேரியண்ட்டுகளில் வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, எஸ்ஆர்1, எஸ்ஆர்2, எஸ்ஆர்3, எஸ்ஆர்4 ஆகிய நான்கு எஸ் வரிசையிலும், க்யூஆர்2 மற்றும் க்யூஆர்3 ஆகியவை க்யூ வரிசையிலும் தேர்வுக்கு கொடுக்கப்படும்.

புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டரில் பல்வேறு திறன் கொண்டதாக வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதன்படி, வேரியண்ட்டுகளுக்கு ஏற்ப 100கிமீ, 125கிமீ, 160 கிமீ மற்றும் அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
சார்ஜிங் விஷயங்களிலும் கோனார்க் பல முக்கிய அம்சங்களை பெற்றிருக்கும். இந்த ஸ்கூட்டருடன் 450W சார்ஜர் வழங்கப்படும். கூடுதலாக மற்றொரு 450W சார்ஜரும் வழங்கப்படலாம். இவை இரண்டையும் இணைந்து சார்ஜ் செய்தால் 900W சார்ஜ் ஏற்றும் திறனை பெற முடியும். இதன்மூலமாக, பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் அளவுக்கான சார்ஜை வெறும் 2 மணி நேரத்திலேயே ஏற்றிவிட முடியும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஏத்தர் மாடல்களைவிட மின் மோட்டார் சப்தம் குறைவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஏர்வாக் என்ற வசதியும் இதில் இடம்பெற உள்ளதாம். சில சூழல்களில் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு செல்லும்போது, தள்ளுபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் மோட்டார் உதவியுடன் ஸ்கூட்டர் மெதுவாக நகர்ந்து செல்லும்.
இதுவரை பெயரையும், அறிமுகத் தேதியையும் மட்டுமே ஏத்தர் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், தொழில்நுட்பம், பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் 29ந் தேதி பெங்களூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஏத்தர் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications