புது ஏத்தர் ஸ்கூட்டரை வருஷத்துக்கு ஒருவாட்டி சர்வீஸ் பண்ணா போதுமாம்!!
பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க காத்திருப்போர் மத்தியில் புதிதாக வர இருக்கும் ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டர் பெரிய அளவிலான ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாகவும், அதிக சிறப்பம்சங்களுடன் பாரம்பரிய ஸ்கூட்டர் டிசைன் அம்சங்களுடன் வருவதே காரணமாக இருக்கிறது.
வரும் 29ந் தேதி பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏத்தர் நிறுவனத்தின் கம்யூனிட்டே டே என்ற வராந்திர நிகழ்ச்சியில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த பல முக்கியத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

புதிய ஏத்தர் ஸ்கூட்டரை 10,000 கிமீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இடையில் பெரிய அளவிலான பிரச்னைகள் இடையில் ஏற்படாது என்பதற்கு ஏத்தர் தரும் மறைமுகமான உத்தரவாதமாக பார்க்கலாம். ஏனெனில், பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் அதிக வருவதாக வெளியாகும் தகவல்களால் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதனை போக்கும் விதத்தில் இந்த சர்வீஸ் இடைவெளி அமையும் என்று கருதப்படுகிறது.
புதிய ஏத்தர் கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் S மற்றும் Q என்ற இரண்டு வரிசையில் வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி, எஸ் வரிசையில் எஸ்ஆர்1, எஸ்ஆர்2, எஸ்ஆர்3, எஸ்ஆர்4, க்யூஆர்2, க்யூஆர்3 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மேலும், பேட்டரியும் பல்வேறு திறன் அளவுகளில் வர இருக்கிறது. இதன்படி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் பேஸ் வேரியண்ட்டானது 100 கிமீ வரையிலும், நடுத்தர பேட்டரி பேக்குகள் 125 மற்றும் 160 கிமீ தூரம் வரையிலும், திறன் வாய்ந்த டாப் வேரியண்ட் பேட்டரி பேக் மாடலானது 200 கிமீ வரையிலும் பயண தூரத்தை வழங்கும். டாப் வேரியண்ட் மூலமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு அலுவலகம் சென்று வரும் வாய்ப்பை வழங்கும். இடையில் சார்ஜ் குறித்த கவலை அதிகம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த மாடல் இருக்கும்.
இந்த புதிய கோனார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 450W பேட்டரி சார்ஜர் கொடுக்கப்படும். அதாவது, பேட்டரியை கேபிள் மூலமாக வீட்டு மின்சார சாக்கெட் மூலமாக எளிதாக சார்ஜ் ஏற்றும் வகையில் இருக்கும். கூடுதலாக மற்றொரு 450W சார்ஜரும் கொடுக்கப்படும். இரண்டு சார்ஜர்களையும் பயன்படுத்தினால், பேட்டரியை 0-80 சதவீதம் அளவுக்கு 2 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.
இந்த புதிய ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டரில் மற்றொரு முக்கிய விஷயம், ஏர்வாக் என்ற வசதி மூலமாக பஞ்சர் உள்ளிட்ட சூழல்களில் ஸ்கூட்டரை தள்ளிச் செல்லும்போது மெதுவாக நகர்வதற்கான சக்தியை மின் மோட்டார் வழங்கும். இதனால், பெண்கள், வயதனாவர்கள் ஸ்கூட்டரை தள்ள வேண்டிய சூழலில் ஆபத்பாந்தவனாக கைகொடுக்கும். அறிமுகம் இல்லாத பிறரின் உதவியை எதிர்பார்க்கும் அவசியம் ஏற்படாது.
டிசைனை பொறுத்தவரையில் குடும்ப பயன்பாட்டுக்கான வழக்கமான பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கும். இதனால், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஓலா ஸ்கூட்டர்களுடன் நேரடியாக போட்டி போடும்.
மேலும், ஏத்தர் நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை தேர்வாக இந்த புதிய ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் இடையிலான ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஏத்தருக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications