ரூ.76,000 விலையில் குடும்பங்கள் கொண்டாடும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஃபுல்-சார்ஜில் 159km ஓட்டலாம்
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக ரிஸ்டா (Rizta) விற்பனை செய்யப்படுகிறது. 2024 ஏப்ரல் 6ஆம் தேதி ரிஸ்டா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து பெர்ஃபார்மன்ஸ் மிக்க '450' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஃபேமலி ஸ்கூட்டராக ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டது.
ஏத்தர் நிறுவனத்தில் குறைந்த விலையில், அன்றாட பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பியவர்களை ரிஸ்டா ஈர்த்தது. இதன் மூலமாக, ரிஸ்டாவின் விற்பனை குறுகிய காலத்தில் அதிகரித்தது. இந்த நிலையில், ரிஸ்டா ஸ்கூட்டர்கள் விற்பனையில் 3 லட்சம் யூனிட்கள் என்கிற மைல்கல்லை ஏத்தர் எனர்ஜி கடந்துள்ளது. அதாவது, இதுவரையில் 3 லட்சம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்டா விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) போன்ற முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏத்தர் ரிஸ்டா சவாலான போட்டியாக விளங்குகிறது.
இதன் மூலமாகவே அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு வருடங்களில் 3 லட்சம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் 1 லட்சம் ரிஸ்டா ஸ்கூட்டர்கள் முதல் 10 மாதங்களில் விற்பனையாகி விட்டன. 2 லட்சம் ரிஸ்டா ஸ்கூட்டர்கள் விற்பனை மைல்கல்லை கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் ஏத்தர் நிறுவனம் கடந்திருந்த நிலையில், அடுத்த 1 லட்சம் ரிஸ்டா ஸ்கூட்டர்கள் அடுத்த 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவை சேர்ந்த நிறுவனமாக இருப்பினும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இங்குதான் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2வது தொழிற்சாலையை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் ஏத்தர் நிறுவனம் நிறுவி வருகிறது. இந்த தொழிற்சாலை திறக்கப்பட்ட பின் ஏத்தர் நிறுவனத்தால் ஒரு வருடத்தில் அதிகப்பட்சமாக சுமார் 10 இலட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
ஏத்தர் ரிஸ்டாவுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதற்கு காரணம், அதன் குறைந்த விலை மட்டுமல்ல, அதன் சுமார் 159கிமீ வரையிலான ரேஞ்ச் (Range) மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களும் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஎஃப்டி டிஸ்பிளே, ரிவர்ஸ் மோட், மேஜிக் ட்விஸ்ட் டெக்னாலஜி, பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை மாடர்ன் வசதிகளாக வழங்கப்படுகின்றன.
ரிஸ்டாவின் டிஎஃப்டி டிஸ்பிளேவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடிய இந்த டிஸ்பிளே வாயிலாக இருப்பிடத்தையும் மற்றவர்களுடன் பகிர முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 56 லிட்டர்கள் கொள்ளளவிலும், ஹேண்டில்பாருக்கு கீழே 22 லிட்டர்கள் கொள்ளளவிலும் இடவசதி வழங்கப்படுகிறது.
ஏத்தர் ரிஸ்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.10 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. டாப் வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.1.28 லட்சம் வரையில் உள்ளது. இந்த விலைகளில் பேட்டரி உடன் ரிஸ்டாவை வாங்குபவர்களுக்கு பேட்டரிக்கான உத்தரவாதம் 8 வருடங்களாக வழங்கப்படுகிறது. ஏத்தரின் பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) என்கிற மாதசந்தா திட்டத்திலும் ரிஸ்டா விற்பனை செய்யப்படுகிறது. BaaS ஆப்ஷனில் வாங்குவதன் மூலம் ரூ.76,000இல் ரிஸ்டாவை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2020ஆம் ஆண்டில் இருந்தே '450' ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு கவனிக்கத்தக்க இடத்தை பெற்றுதந்தது ரிஸ்டா என சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ரிஸ்டாவின் வெற்றியை தொடர்ந்து, விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதற்காக இ.எல் (EL) பிளாட்ஃபாரத்தை ஏத்தர் வடிவமைத்துள்ளதால், வரும் மாதங்களில் ரிஸ்டாவை போன்று பல வெற்றிக்கரமான மாடல்களை இந்த நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications