அடிமாட்டு விலையில் அதிக ரேஞ்சுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் நிறுவனம்.. என்ன தெரியுமா?
விரைவிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் வெளியிடவுள்ளது ஏத்தர் எனர்ஜி. மிகவும் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட ஏத்தர் திட்டமிட்டு வருகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம். அது என்ன ஸ்கூட்டர் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
இப்போது சந்தையில் ரிஸ்டா மற்றும் 450 சீரிஸ் ஆகிய இரண்டு வகையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனையில் வைத்திருக்கிறது ஏத்தர். இதில் ரிஸ்டா என்பது குடும்ப வாடிக்கையாள்களை மையப்படுத்தி பிராக்டிகலான அம்சங்கள் நிறைந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், 450 சீரிஸ் என்பது இளைஞர்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸை விரும்பும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஒரு ஸ்கூட்டராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்போது நிறுவனங்கள் எல்லாம் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழான விலையிலேயே தங்களது தொடக்க நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே 1.10 லட்சம் ரூபாய் தொடக்க விலை கொண்ட ரிஸ்டா தான். டிவிஎஸ் மற்றும் பஜாஜை விட தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனையாவதற்கு இந்த சற்று கூடுதலான விலையே காரணம் என அந்நிறுவனம் நினைக்கிறது.
எனவே ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதனால் ஏற்கனவே மற்ற ஸ்கூட்டர்களுக்குப் பயன்படுத்திய பிளாட்ஃபார்மையே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் பயன்படுத்தினால் சரிப்பட்டு வராது என முற்றிலும் புதிதாக EL என்ற பிளாட்ஃபார்மை புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிற்காக உருவாக்கியிருக்கிறது ஏத்தர். இந்த பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட ஒரு கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை கடந்தாண்டு அறிமுகமும் செய்தது அந்த நிறுவனம்.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையில் போதுமான அம்சங்கள் மற்றும் பிராக்டிகாலிட்டியுடன் இந்தப் புதிய ஸ்கூட்டரை ஏத்தர் வடிவமைத்து வருகிறது. தற்போது இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. இந்தப் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக முதலிடத்திற்கு முன்னேற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் முறையே 49,453 யூனிட்டுகள் மற்றும் 46,246 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ளை விற்பனை செய்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக 35,688 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது ஏத்தர் எனர்ஜி. விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறது. மேலும் BaaS திட்டத்தையும் உடன் சேர்க்கும் போது இன்னும் குறைவான விலையிலேயே இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.
எனவே தான் இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க புதிய ஸ்கூட்டர் மூலம் திட்டமிட்டு வருகிறது. மேலே கூறியது போல 1 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையை இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் EL பிளாட்ஃபார்மில் இந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி மேலும் பல புதிய ஸ்கூட்டர்களை உருவாக்கும் திட்டமும் அந்நிறுவனத்திடம் இருக்கிறது.
அதிக அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என்று திட்டமிடும் போது அதற்கேற்ற வகையில் தயாரிப்பையும் உயர்த்த வேண்டும் இல்லையா. எனவே தான் மகாராஷ்டிராவில் சத்திரபதி சாம்பாஜி நகரில் புதிய தொழிற்சாலையைக் கட்டமைத்து வருகிறது. முழுவதுமாக முடிவடையும் போது ஆண்டுக்கு 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் திறனை இந்த தொழிற்சாலை கொண்டிருக்கும். முதற்கட்ட முடிவில் 5 லட்சம் தயாரிப்புத் திறனை இந்த தொழிற்சாலை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணியில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஏத்தர் எனர்ஜியும் ஒன்று. தொடக்கத்தில் குறைவாக விற்பனையாகி வந்தாலும் தற்போது பல ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு இணையாக மக்களின் நம்பிக்கையை ஏத்தர் எனர்ஜி பெற்றிருக்கிறது. குறைவான விலையில் இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு ஸ்கூட்டர் வெளியாகும் என்பது வரவேற்கத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications