ஆகஸ்ட் 29ல் வெளியாகிறது ஏத்தரின் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைவான விலையில் வெளியிடும் பொருட்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வந்தது. தற்போது அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. ஆகஸ்ட் 29ம் தேதியன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிகிறது.
தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் 450 சீரிஸ் மற்றும் ஏத்தர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாம் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டவை. ஸ்போர்ட்டியான பெர்ஃபாமன்ஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் பொருட்டு இந்த பிளாட்ஃபார்மை ஏத்தர் உருவாக்கியது. இதனால் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாம் சற்று கூடுதலான விலையையே கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான் விலை குறைவான பட்ஜெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதற்காக EL என்ற புதிய பிளாட்ஃபார்மை ஏத்தர் எனர்ஜி உருவாக்கியிருந்தது. கடந்தாண்டு இந்தப் புதிய பிளாட்ஃபார்மை அறிமுகமும் செய்திருந்தது. இந்தப் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே ஆகஸ்ட் மாத இறுதியில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு ஆகஸ்ட் மாத இறுதியிலும் கம்யூனிட்டி டே என்ற வருடாந்திர நிகழ்வை நடத்தி வருகிறது ஏத்தர் எனர்ஜி. இந்த நிகழ்வில், தங்களின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு, சாஃப்ட்வேர் அப்டேட்கள், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் என தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த 360 டிகிரி அப்டேட்டை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

2026ம் ஆண்டிற்கான கம்யூனிட்டி டே நிகழ்வு ஆகஸ்ட் 29ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. 'A New Dawn of Magic' என இந்த நிகழ்விற்கு ஏத்தர் எனர்ஜி பெயரிட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கடந்தாண்டு காட்சிப்படுத்தப்பட்ட EL01 கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை வடிவம், அதாவது நாம் எதிர்பார்க்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
கட்டுரையில் இணைக்கப்பட்டிருக்கும் EL01 கான்செப்ட் ஸ்கூட்டரை ஒற்றே புதிய தயாரிப்பு நிலை வடிவமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கலாம். ஏத்தர் நிறுவனம் காப்புரிமைக்குப் பதிவு செய்திருக்கும் டிசைன் புகைப்படங்களும் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. 1 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EL பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி, ஒன்றல்ல, பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஏத்தர் எனர்ஜி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல் ஸ்கூட்டராக EL01 கான்செப்டின் தயாரிப்பு நிலை வடிவம் இருக்கும். இத்துடன் வேறு சில கான்செப்ட் மாடல்களும் கூட ஆகஸ்ட் 29 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தவிர்த்து, அடுத்து சில ஆண்டுகளுக்கு ஏத்தர் எனர்ஜி எந்த பாதையில் பயணிக்கவிருக்கிறது என்பது குறித்த அப்டேட்டையும் இந்த நிகழ்வில் ஏத்தர் வழங்கும். மேலும், ஏத்தர்ஸ்டேக் 7.0 சாஃப்ட்வேர், அடுத்த தலைமுறை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த அப்டேட்களையும் இந்த நிகழ்வில் ஏத்தர் வழங்கும் எனத் தெரிகிறது. ஏத்தரின் அடுத்த கட்ட பயணம் எப்படி இருக்கும் என்பதை நிகழ்வின் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதனை நாம் கூறலாம். காரணம், தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற ஏத்தர் ஸ்கூட்டர்களை விட இது குறைவான விலையைக் கொண்டிருக்கும் என்பது தான். இந்தப் புதிய தயாரிப்பின் அறிமுகத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்திற்கான போட்டியில், டிவிஎஸ் மற்றும் பஜாஜூடன் ஏத்தர் எனர்ஜியும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications