இனி ஸ்கூட்டர்களுக்கும் ஏர்பேக் வரப்போகுது.. இனி பயமில்லாம சாலைகள்ல பயணம் செய்யலாம்
கார்களை மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதில் ஏர்பேக்குகள் (Airbags) முக்கியப் பங்கு வகிக்கின்றன. கார் தடம்புரளும் போது சுற்றிலும் இருக்கும் ஏர்பேக்குகள், உள்ளே இருக்கும் பயணிகளின் பெரியளவில் அடிபடாமல் பாதுகாக்கின்றன. இதனால் தான் 6 ஏர்பேக்குகளை கார்களில் கொடுப்பது நிறைய நாடுகளில் கட்டாயமாக இருக்கிறது. இந்தியாவில் அப்படி கட்டாயம் இல்லாவிட்டாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களாகவே முன்வந்து கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.
சற்று இப்போது விஷயத்திற்கு வரும். இப்போது பேச்சு கார்களில் உள்ள ஏர்பேக்குள் பற்றி அல்ல, ஸ்கூட்டர்களுக்கான ஏர்பேக் பற்றியது. ஆம், இப்போது கார்களில் இருந்து பைக்குகளில் ஏர்பேக்குகளை கொடுக்கும் நிலையை நோக்கி ஆட்டோமொபைல் உலகம் முன்னேறியிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் ஏர்பேக் என்பது புதுமையான கான்செப்ட் கிடையாது. 1990-களில் இருந்தே பேசப்பட்டு வரும் ஒரு கான்செப்ட் தான்.

ஆனால், கார்களைப் போல இருசக்கர வாகனங்களில் ரைடர் பாதிக்கப்படாமல் இருப்பதை அது பெரியஅளவில் உறுதி செய்யாது என்பதனாலேயே, இதுவரை அது பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது. ஹோண்டா மட்டுமே தங்களுடைய விலை உயர்ந்த கோல்டுவிங் (Goldwing) பைக்கில் ஏர்பேக்கைக் கொடுத்து வருகிறது. அந்த பைக்கின் தன்மைக்கு அது அவசியமானதும் கூட.
ஆனால் வழக்கமாக நாம் ஓட்டும் இருசக்கர வாகனங்களில் ஏர்பேக்குகளை எந்தளவிற்கு உபயோகமானதாக இருக்கும்? இதற்கான தீர்வைத் தான் ஆட்டோலிவ் (Autoliv) என்ற நிறுவனம் தற்போது வழங்கியிருக்கிறது. உலகளவில் முன்னணி ஆட்டோமொபைல் பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பு நிறுவனம் ஆட்டோலிவ். இந்தியாவில் மாருதி சுஸூகி, ஹோண்டா, மஹிந்திரா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கார்களும் ஏர்பேக்ககுகளை இந்தியாவிலேயே தயாரித்துக் கொடுத்து வருவது இந்த நிறுவனம் தான்.

இந்த நிறுவனம் இப்போது ஸ்கூட்டர்களில் பயன்படுத்தும் வகையிலான ஒரு ஏர்பேக்கை உருவாக்கியிருக்கிறது. கார்களில் இருப்பது போன்று இல்லாமல், ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த ஏர்பேக் உருவாக்கப்பட்டிருக்கிறது. கார்களில் விபத்து நிகழும் போது, பயணிகள் வேகமாக முன்னே இருக்கும் பொருட்களிலும், பக்கவாட்டிலும் மோதுவதனாலேயே அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்த காரணத்தினாலேயே தான் ஏர்பேக்குகள் அதனைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் ஸ்கூட்டர்களில் செல்லும் போது, ரைடர் வாகனத்தில் இருந்து தூக்கிய எறியப்படுவார். அப்போது தரையிலோ, சாலையிலோ அல்லது அருகில் இருக்கும் வாகனத்திலோ பலமாக மோதும் போது தான் உயர்சேதம் ஏற்படுகிறது. எனவே ரைடர் தூக்கி எறியப்படும் போது அவருடனேயே ஒட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய ஏர்பேக்கை உருவாக்கியிருக்கிறது ஆட்டோலிவ்.
காரில் உள்ள ஏர்பேக் போலவே தான் இது செயல்படும். அதாவது விபத்து நிகழும்போதே, சென்சார்கள் அதனைக் கணித்து ஏர்பேக்கில் காற்றை நிரப்பி வெளியே தள்ளும். ஆனால் இது வழக்கமாக வட்ட வடிவில் பலூன் போல இருக்காத. மாறாக, ரைடரின் தலை மற்றும் இடுப்புப் பகுதியைச் சற்றிப் பிடித்தும் கொள்ளும் வகையில் இருக்கும். மேலும், இந்த ஏர்பேக் ஸ்கூட்டருடன் இணைந்தே இருக்காது. காற்று நிரம்பியவுடன் ஏர்பேக் ஸ்கூட்டரில் இருந்து துண்டிக்கப்பட்டுவிடும்.
இதனால் ரைடர் பறந்து சென்று விழுந்தாலும் உடலின் முக்கியமான பாகங்களில் ஏர்பேக்கினால் அதிகளவு சேதாரம் இல்லாமல் தவிர்க்கப்படும். இதெல்லாம் ஒர்க்அவுட் ஆகுமா என நீங்கள் நினைப்பது தெரிகிறது. ஆனால், எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது ஒரு பாதுகாப்பு இருப்பது நல்லது தானே. மேலும் இந்த ஏர்பேக் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் யமஹா விற்பனை செய்யும் டிரைசிட்டி என்ற ஸ்கூட்டரில் இந்த ஸ்கூட்டர் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை ஒரு சோதனை ஓட்டமாகக் கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். டிரைசிட்டி ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஏர்பேக் எந்தவிற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதைப் பொறுத்து அது மேலும் விரிவுபடுத்தப்படுமா இல்லையா என்பது தெரியும். மேலும், இதனை ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனமே உருவாக்கியிருக்கிறது என்பதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களாலும் எளிதாக இதனைப் தங்களுடைய ஸ்கூட்டர்களில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications