அதிவேக பயணத்திற்காக ஸ்பாய்லருடன் ஹெல்மெட்: அக்ஸர் அறிமுகம்!
பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், நீண்ட தூரப் பயணங்களில் சவுகரியத்திற்கும் முக்கியமானது. குறிப்பாக, பைக்கில் அதிக வேகத்தில் செல்லும்போது காற்றின் அழுத்தம் கழுத்துப் பகுதியில் ஏற்படுத்தும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில்கொண்டு அக்ஸர் நிறுவனம் அகெரா (Agera) என்ற பெயரில் புதிய ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வேகா ஆட்டோ நிறுவனத்தின் பிரீமியம் பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான அக்ஸர், இந்த ஹெல்மெட்டில் பந்தய பைக் ரைடர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டின் வடிவமைப்பு மற்றும் காற்றியக்கவியல் அம்சங்களை உள்ளடக்கியதாகவும், தினசரி நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அகெரா ஹெல்மெட்டில் பின்புறத்தில் ஏரோடைனமிக் தத்துவப்படி ஸ்பாய்லருடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதிக வேகத்தில் பயணிக்கும்போது காற்றின் ஓட்டத்தைச் சீராக நிர்வகிக்கவும், காற்றின் விசையால் ஏற்படும் தடங்கலை குறைக்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் வேகமாகப் பயணிக்கும்போது கழுத்தில் சோர்வு ஏற்படுவது குறையும்.
இந்த ஸ்பாய்லர் வெறும் தோற்றத்திற்காக மட்டும் வழங்கப்படவில்லை. இது பின்புறக் காற்று வெளியேற்றும் அமைப்பாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் ஹெல்மெட்டின் வடிவமைப்புடன் காற்றோட்ட வசதியையும் இணைத்துள்ளது அக்ஸர். இந்த ஹெல்மெட்டில் தெளிவான பார்வைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட, கீறல் எதிர்ப்பு மற்றும் புற ஊதாக் கதிர் பாதுகாப்பு கொண்ட வெளிப்புற ரீவோ வைசர் (Revo Visor) வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்த உபகரணமும் இல்லாமல் வைசரை மாற்றக்கூடிய கழற்றும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
வெயிலில் பயணிக்கும்போது கண்களில் படும் ஒளியின் கூச்சத்தைக் குறைக்க உள்ளே ஸ்மோக் சன் வைசர் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பனிப்படர்வைக் குறைக்கும் வசதியைப் பெறுவதற்காக பின்லாக் (Pinlock) பொருத்துவதற்கான வசதியும் இதில் உள்ளது. இருப்பினும், பின்லாக் லென்ஸ் ஹெல்மெட்டுடன் சேர்த்து வழங்கப்படுமா என்பது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், அகெரா ஹெல்மெட்டில் டபுள் டி-ரிங் (Double D-Ring) அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து போன்ற அவசரச் சூழல்களில் ஹெல்மெட்டை அகற்ற உதவும் எமர்ஜென்சி குயிக் ரிலீஸ் சிஸ்டம் (EQRS) வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த வசதி காயமடைந்த ரைடருக்கு உதவும்போது ஹெல்மெட்டை அகற்றுவதற்கான ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹெல்மெட்டின் பாதுகாப்புச் சான்றிதழ், எடை, விலை மற்றும் அளவுகள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
புதிய அகெரா ஹெல்மெட்டை இந்தியச் சந்தைக்கு மட்டுமின்றி, சர்வதேசச் சந்தைகளிலும் கொண்டு செல்ல அக்ஸர் திட்டமிட்டுள்ளது. வேகமான பயணத்திற்கான வடிவமைப்பு, காற்றோட்ட வசதி மற்றும் நடைமுறைப் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை ஒருங்கிணைத்து இந்த ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்டின் விலை மற்றும் விற்பனை தொடர்பான முழுமையான விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அதிக வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த ஹெல்மெட் வர இருப்பதால் நிச்சயமாக விலையும் பல இளம் ரைடர்களுக்கு ஏதுவானதாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேகமாக செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்களில் காற்றினால் ஏற்படும் தடங்கலை தவிர்ப்பதற்காக ஸ்பாய்லர் கொடுக்கப்படுகின்றன. அதே தொழில்நுட்பத்தை பைக் ரைடர்களின் பாதுகாப்புக்காக ஹெல்மெட்டில் கொண்டு வரும் முயற்சி நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


