நேற்று வரை இந்த பல்சர் பைக்கை வாங்கியவர்களுக்கு இப்போ பொறாமையாக இருக்கும்! செலவு ரூ.24,500 வரை குறைந்தது!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் பல்சர் என்.எஸ் 400இசட் (Pulsar NS 400Z) பைக்கை 350சிசி என்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய என்.எஸ் 400இசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது ரூ.1,80,092 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஜின் உடன் இந்த பல்சர் பைக்கில் வேறு ஏதேனும் அப்டேட்கள் (Updates) கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்பட உலகளவில் முன்னணி 2-வீலர் & 3-வீலர் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ ஆகும். மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், பல்சர் பைக்குகள் தான் பஜாஜின் பிரதானமான அடையாளமாக விளங்குகின்றன. 125சிசி என்ஜினில் இருந்து விற்பனை செய்யப்படும் பஜாஜ் பல்சர் பைக்குகளிலேயே பல்சர் என்.எஸ் 400இசட் தான் விலைமிக்கது ஆகும்.

இந்த விலையுயர்ந்த 400சிசி பல்சர் பைக் தான் தற்போது 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில், என்.எஸ் 400இசட் பைக்கில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள 349.13சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 40.6 பிஎஸ் மற்றும் 33.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
பஜாஜ் டோமினார் 400 (Dominar 400) பைக்கில் வழங்கப்படும் இதே என்ஜின், என்.எஸ் 400இசட் பைக்கின் முந்தைய 373சிசி என்ஜினின் அதிகப்பட்ச 43 பிஎஸ் மற்றும் 35 என்.எம் டார்க் திறனை விட 2.35 பிஎஸ் மற்றும் 1.8 என்.எம் டார்க் திறன் குறைவாக வழங்கக் கூடியதாக உள்ளது.

அதேபோல், என்ஜினின் அதிகப்பட்ச குதிரையாற்றல் ஆனது முன்பை விட 200 ஆர்பிஎம் கூடுதலாக 9,000 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜின் சுழலும்போது கிடைக்கக்கூடியதாக உள்ளது. அதிகப்பட்ச டார்க் திறனை பெறுவதற்கும் முந்தைய 373சிசி என்ஜினை விட 1,000 ஆர்பிஎம் கூடுதலாக 7,500 ஆர்பிஎம்-இல் என்ஜின் இயங்க வேண்டும்.
இந்த மாற்றங்களுக்காக, முந்தைய 373சிசி என்ஜின் சிஸ்டத்தில் ஸ்ட்ரோக்கின் நீளம் 60மிமீ-இல் இருந்து 56.1மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, என்ஜினின் போர் (Bore)-இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், லிக்யுடு-கூல்டு என்ஜினான இதன் மூலம் பைக்கின் பவர்-எடை விகிதம் ஒரு டன் எடைக்கு 247 பிஎஸ் ஆக மாறியுள்ளது.
350சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளதால், பைக்கிற்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி (GST) 18% ஆக குறைந்துள்ளது. இதன் மூலமாக, புதிய பல்சர் என்.எஸ் 400இசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை, இன்ஸ்சூரன்ஸ் (Insurance) மற்றும் ஆர்டிஓ பதிவு (RTO Registration) கட்டணம் என மொத்தமாக ரூ.24,500 வரையில் பணத்தை சேமிக்கலாம் என பஜாஜ் நிறுவனம் மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளது. புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.80,092 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய விலை ரூ.1,93,900 ஆக இருந்தது.
புதிய 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள பல்சர் என்.எஸ் 400இசட் பைக் வழக்கம்போல், குறைந்த விலையில் பல சிறப்பான வசதிகளை கொண்ட பல்சர் பைக்காக தொடர்கிறது. 4 ரைட் மோட்கள், குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், ரேடியல் டயர்கள் மற்றும் ப்ளூடூத் (Bluetooth) உடன் இணைக்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் 350சிசி-க்கு மேலான என்ஜினை கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி-ஐ 28%-இல் இருந்து 40% ஆக உயர்த்தியதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் கீழ் விற்பனை செய்யப்படும் அனைத்தும் 350சிசி+ பைக்குகளையும் 350சிசி-க்கு உள்ளாக மாற்றி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள பல்சர் என்.எஸ் 400இசட் பைக்கின் விலை இந்த காரணத்தினால் குறைந்துள்ளதால், இந்த விலையுயர்ந்த பல்சர் பைக்கின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications