எகிடுதகிடான டிமாண்ட்... சேத்தக் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் பஜாஜ் ஆட்டோ!!
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடத்தில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் உள்ளது. இந்த நிலையில், தேவையை சமாளிக்கும் விதமாக சேத்தக் உற்த்தியை கணிசமாக உயர்த்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு அதிகபட்சமாக 62,000 ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் இருக்கும் நிலையில், இதனை மாதத்திற்கு 80,000 யூனிட்டுகளாக உயர்த்த பஜாஜ் ஆட்டோ இலக்கு நிர்ணயித்துள்ளது.
சேத்தக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், புக்கிங் எண்ணிக்கையானது உற்பத்தியைவிட அதிகமாக இருக்கிறது. தற்போது மாதத்திற்கு 60,,000 சேத்தக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் இருந்தாலும், உதிரிபாகங்கள் வினியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அந்தப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுள்ளதால், உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பஜாஜ் ஆட்டோ தயாராகி வருகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் தற்போதைய திட்டத்தின்படி, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், அதாவது 2027 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், மாத உற்பத்தியை 80,000 ஸ்கூட்டர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக உற்பத்தியில் உள்ள தடைகளை நீக்கி, உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதில் பஜாஜ் கவனம் செலுத்தி வருகிறது.
புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரத்து செய்வதை தவிர்க்கவும், போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காத வகையிலும் இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது பஜாஜ் ஆட்டோ. அதாவது, சேத்தக் ஸ்கூட்டரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் டெலிவிரி கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
சேத்தக் ஸ்கூட்டரின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் புதிய மாடல்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு விலைப் பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களையும் கவர முடியும்.
இதற்கிடையில், பஜாஜ் ஆட்டோ தனது ஆறாவது வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. இதற்காக சில மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, அதிகத் தேவையுள்ள பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியையும் அதிகரிக்க கூடுதல் உற்பத்தி ஆலை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு தற்போது சுமார் 25 சதவீதமாக இருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இது 50 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் நிறுவனம் கணிக்கிறது. மாநிலங்களுக்கு இடையே இந்த வளர்ச்சி வேறுபட்டாலும், மின்சார ஸ்கூட்டர்களுக்கான சந்தை வாய்ப்பு தொடர்ந்து விரிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், சேத்தக் ஸ்கூட்டரின் விற்பனை வளர்ச்சிக்கு ஏற்ப நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான சேவை மற்றும் விற்பனை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதும் முக்கியத்துவம் பெறுகின்றன. மின்சார வாகனச் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் சூழலில், உற்பத்தித் திறனை உயர்த்துவது மட்டுமின்றி விலை, அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
புதிய சேத்தக் மாடல்கள் அறிமுகமாகும்போது, பல்வேறு பட்ஜெட்டுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைக்கும். மொத்தத்தில், மாதம் 80,000 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் பஜாஜ் ஆட்டோவின் திட்டம் காரணமாக வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து விரைவாக டெலிவிரி பெறுவதற்கும், விற்பனைக்கு பிறகு சிறந்த சேவையையும் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


