102 கிமீ மைலேஜ்! ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த பைக்! இப்ப ஷோரூம் பக்கம் எட்டி பாக்க கூட ஆள் இல்ல!
உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமை பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Bajaj Freedom 125 CNG) பைக்கிற்கு உண்டு. இது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், NG04 ட்ரம் வேரியண்ட்டின் விலை 91,566 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் NG04 ட்ரம் எல்இடி வேரியண்ட்டின் விலை 1,04,117 ரூபாயாக உள்ளது. இந்த வரிசையில் டாப் வேரியண்ட்டான NG04 டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1,09,852 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது சிஎன்ஜி மூலம் இயங்க கூடியது என்பதால், வழக்கமான பெட்ரோல் பைக்குகள் உடன் ஒப்பிடும்போது, நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி 80 சதவீதம் குறைவாக வெளியிடுகிறது. அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்ற வசதிகளையும் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி கொண்டுள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி மூலமாக மட்டுமல்லாது, பெட்ரோல் மூலமாகவும் கூட இயங்க கூடிய திறன் வாய்ந்தது. சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 102 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) கிடைக்கும் எனவும், பெட்ரோல் மூலமாக இயங்கும்போது ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் எனவும் பஜாஜ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் உச்சமாக பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் தனது மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் பதிவு செய்து பஜாஜ் நிறுவனத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாஹன் தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,210 பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்குகள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பார்த்தால் இதுதான் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் மிகவும் குறைவான மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக வேறு எந்தவொரு மாதத்திலும் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் இவ்வளவு குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது கிடையாது.
இது குறித்து ஆட்டோகார் ப்ரோஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது விற்பனை மந்தமாகி கொண்டிருந்தாலும் கூட, ஒரு சமயத்தில் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாகதான் இருந்தது. குறிப்பாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,167 பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதுதான் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிஎன்ஜி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதுதான் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் வீழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 23 மாதங்களில் மட்டும் சிஎன்ஜி விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றுக்கு இடையேயான விலை வித்தியாசம் குறைந்துள்ளது.
இதுதான் இந்த பைக்கின் வீழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் தற்போது அதிக மைலேஜ் தரும் டூவீலர்களுக்கான தேவை மிகவும் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை வரும் மாதங்களில் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications