அடிமாட்டு விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் இது தான்.. 120 கிமீ வரை மைலேஜ் கொடுக்குதாம்!
வித்தியாசமான பைக்குகள் என்று ஒரு பட்டியலை எடுத்தால் அதில் முதலிடம் பஜாஜின் ஃபிரீடம் 125 (Bajaj Freedom 125) பைக்கிற்கு தான் ஒதுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இது போன்று வேறு ஒரு பைக் இல்லவே இல்லை. இந்தியாவில் பெட்ரோலில் இயங்கும் பைக்குகள் மட்டும் 99.99 சதவீதம் விற்பனையில் இருக்கின்றன. பெட்ரோல் இல்லாமல், வேறொரு எரிபொருளில் இயங்கும் ஒரேயொரு பைக் என்றால் அது பஜாஜின் ஃபிரீடம் 125 தான்.
ஃபிரீடம் 125 பைக்கானது பிரதானமாக CNG எரிபொருளில் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே விற்பனையில் இருக்கும் முதல் மற்றும் ஒரே CNG பைக் பஜாஜின் ஃபிரீடம் 125 தான். இந்த பைக்கில் 2 கிலோ கொள்ளளவு கொண்ட CNG டேங்க் மற்றும் 2 லிட்டர் அளவில் சிறிய பெட்ரோல் டேங்கை ஆகிய இரண்டையுமே பஜாஜ் கொடுத்துள்ளது. பெட்ரோல் டேங்க் ரிசர்வாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்:
வித்தியாசமான பைக்காக இருந்தாலும், இந்தியாவிலேயே அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்கும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெட்ரோலில் இயங்கும் போது இல்லை. பெட்ரோலில் இயங்கும் போது வழக்கமான கம்யூட்டர் பைக்குகளைப் போலவே லிட்டருக்கு 65 கிமீ முதல் 70 கிமீ வரையிலான மைலேஜையே இந்த ஃபிரீடம் 125 பைக்கும் கொடுக்கிறது.
ஆனால், CNG எரிபொருளில் இயங்கும் போது யாரும் எதிர்பாராத அளவில் 1 கிலோ CNG-க்கு 100 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. CNG எரிபொருளானது பெட்ரோலை விட 10 ரூபாய் வரை குறைவான விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பயன்பாட்டுச் செலவும், பெட்ரோல் பைக்குகளை விட இந்த பஜாஜ் ஃபிரீடம் 125 பைக்கில் குறைவாகவே இருக்கும்.

இதெல்லாம் பேப்பரில் நன்றாகத் தான் இருக்கும். தினசரிப் பயன்பாட்டில் இவ்வளவு மைலேஜ் கொடுக்குமா என நீங்கள் நினைப்பது கேட்கிறது. பஜாஜ் ஃபிரீடம் 125 பைக்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஹைதராபாத் முதல் நெல்லூர் வரை இந்த பஜாஜ் ஃபிரீடம் 125 பைக்கில் பயணம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபத் முதல் நெல்லூர் வரை சுமார் 504 கிமீ வரை பயணம் செய்த அவர், இடையே நான்கு முறை CNG சிலிண்டர்களை நிரப்பியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக 80 கிமீ வரையிலான வேகத்தில் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், சராசரியாக 60 கிமீ முதல் 75 கிமீ வரையிலா வேகத்தில் பயணம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளர்.
இந்தப் பயணத்தில் CNG எரிபொருள் நிரப்புவதற்காக 533 ரூபாய் மட்டும் செலவழித்ததாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவே மற்ற இருசக்கர வாகன பயனாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவே வேறொரு பெட்ரோல் கம்யூட்டர் பைக் என்றால் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை செலவாகியிருக்கும். இந்த பைக்கில் அதே அளவே செலவாகும் என அவர் நினைத்ததாகவும், ஆனால் குறைவான அளவே செலவாகியிருப்பது தனக்கே ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் வேறொருவரின் கருத்துக்கு அளித்த மறுமொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மட்டுமின்றி இன்னும் நிறைய வாடிக்கையாளர்களும் ஃபிரீடம் 125 பைக் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல மைலேஜ் கொடுப்பதாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது லிட்டருக்கு 120 கிமீ வரையிலான மைலேஜைப் பெற முடிவதாகவும் அவர்கள் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஃபிரீடம் 125 பைக்கை பயன்படுத்துவதில் இருக்கும் சவால்கள்:
முதலில் இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகள் இருக்கும் அளவிற்கு பரந்து விரிந்த நெட்வொர்க் CNG-க்கு கிடையாது. எனவே நாம் செல்லும் இடங்களில் CNG நிலையங்கள் இருக்கின்றனவா என்பதை தொடர்ந்து நாம் செக் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். மேலும், நாம் வசிக்கும் பகுதியில் போதுமான அளவில் CNG நிலையங்கள் செயல்பட்டால் தான் இந்த பைக்கின் பயன்பாடு இலகுவாக இருக்கும். இல்லையென்றால் கஷ்டம் தான்.
இரண்டாவது சீட்டின் உயரம். ஃபிரீடம் 125 பைக்கில் CNG சிலிண்டரை, சீட்டிற்குக் கீழேயே கொடுத்துள்ளது பஜாஜ். இதனால் சீட்டின் உயரம் மற்ற கம்யூட்டர் பைக்குகளுடன் ஒப்பிடும் போது சற்று அதிகமாக 825 மிமீ என்ற அளவில் இருக்கிறது. ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் சீட் உயரம் 785 மிமீ தான். எனவே உயரம் குறைவானவர்கள் கூட அந்த பைக்கை எளிதாகப் பயன்படுத்த முடியும். ஆனால், ஃபிரீடம் 125 பைக்கானது உயரம் குறைவானவர்களுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய பைக்காக இருக்காது.
அதிகம் பயணம் செய்பவர்கள் அடிக்கடி இந்த பைக்கை பெட்ரோல் அல்லது CNG நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். ஒரு கம்யூட்டர் பைக்கில் டேங்க் ஃபுல் செய்தீர்கள் என்றால் 400 கிமீ முதல் 500 கிமீ வரை கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்த பைக்கில் இரண்டு சிறிய டேங்குகள் என்பதால், 200 கிமீ-க்கு ஒரு முறை கண்டிப்பாக எரிபொருள் நிலையம் செல்ல வேண்டிய தேவை இருக்கும்.
என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?
இவற்றைத் தவிர இந்த CNG பைக்கில் கவலைப்பட வேண்டிய அம்சம் எதுவும் கிடையாது. பைக் எந்த எரிபொருளில் இயங்க வேண்டும் என்ற முடிவை நாமே எடுக்கலாம். ஹேண்டில்பாரில் அதற்கான சிறிய ஸ்விட்ச் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி, CNG எரிபொருளில் பைக் இயங்க வேண்டுமா அல்லது பெட்ரோலில் இயங்க வேண்டுமா என நாம் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த CNG பைக்கை, டிரம், டிரம் LED மற்றும் டிஸ்க் LED என மூன்று வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ். வேரியன்ட்களின் பெயர்களை வைத்தே மூன்றுக்கும் இடையே என்ன வேறுபாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஸ்டாண்டர்டு கம்யூட்டர் பைக்குகளை விட சற்று கூடுதலான விலையில் இந்த CNG கம்யூட்டர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடிப்படையான டிரம் வேரியன்டானது 91,566 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இடைநிலை டிரம் LED வேரியன்ட் மற்றும் டாப் எண்டு டிஸ்க் LED வேரியன்ட்களானது முறையே 1.04 லட்சம் ரூபாய் மற்றும் 1.11 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளைக் கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
மற்ற பெட்ரோல் பைக்குகளை விட சற்று கூடுதலான விலையை இந்த பைக் கொண்டிருக்கிறதே என நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த விலையை குறைவான பயன்பாட்டுச் செலவைக் கொண்டு நீங்கள் சரிக்கட்டி விடலாம். பெட்ரோல் கம்யூட்டர் பைக்குகளை விட 50 சதவீதம் வரை குறைவான பயன்பாட்டுச் செலவை இந்த பைக் கொண்டிருப்பதாக பஜாஜ் கூறுகிறது. ஒரு கம்யூட்டர் பைக்காக, இந்திய வாடிக்கையாளர்கள் தேவையை தாராளமாக இந்த பஜாஜ் ஃபிரீடம் 125 பூர்த்தி செய்யும், பயன்பாட்டிலும் சரி, மைலேஜிலும் சரி.


Click it and Unblock the Notifications