100 கிமீ மைலேஜ் குடுத்தாலும் பிளாட்டினாவ ஏன் ஒருத்தரும் ஏறெடுத்து கூட பாக்க மாட்டாறாங்க? இப்படியே போனா கஷ்டம்
அதிக மைலேஜ் தரக்கூடிய ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது பஜாஜ் பிளாட்டினாவாகதான் (Bajaj Platina) இருக்கும். பஜாஜ் பிளாட்டினா பைக் கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது வெளியான விளம்பரங்களில், அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 108 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டது.
நடைமுறை பயன்பாட்டில் இது சற்று சாத்தியமில்லை என்றாலும் கூட, ஒரு லிட்டருக்கு 90-100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக, பஜாஜ் பிளாட்டினா பைக்கின் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். பஜாஜ் பிளாட்டினா பைக்கில் DTS-i இன்ஜின் வழங்கப்படுகிறது. Digital Twin Spark Ignition சிஸ்டம் என்பதன் சுருக்கம்தான் DTS-i.

அதாவது சிங்கிள் ஸ்பார்க் பிளக்கிற்கு பதிலாக, 2 ஸ்பார்க் பிளக்குகளை பஜாஜ் பிளாட்டினா பைக் கொண்டிருக்கும். இது எரிபொருள் எரிப்பு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்து, சிறப்பான மைலேஜ் கிடைக்க வழிவகுக்கிறது. அத்துடன் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் எடையும் மிகவும் குறைவுதான்.
பஜாஜ் பிளாட்டினா பைக் தற்போதைய நிலையில் 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 99.59 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றாகும். இதன் எடை வெறும் 117 கிலோ மட்டுமே. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் மற்றொரு வெர்ஷனில் 115.06 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடையும் கூட வெறும் 116 கிலோவாக மட்டுமே உள்ளது.

இந்த 'லைட்வெயிட்' பண்பு காரணமாகவும், பஜாஜ் பிளாட்டினா சிறப்பான மைலேஜை வழங்குகிறது. இருப்பினும் சமீப காலமாக பெரும்பாலான மாதங்களில் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஜாஜ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெறும் 24,737 பிளாட்டினா பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29,689 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 4,952 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16.68 சதவீத வீழ்ச்சி ஆகும்.
ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 99.59 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக்கின் ஆரம்ப விலை 70,788 ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் 115.06 இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலின் ஆரம்ப விலை 88,890 ரூபாயாக இருக்கிறது. பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை தடுமாற தொடங்கியிருப்பது பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அதிக விலை என்பது இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். உதாரணத்திற்கு பஜாஜ் பிளாட்டினா பைக்கின் 100 சிசி வெர்ஷன் நேரடி போட்டி மாடலான ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 67,005 ரூபாய் மட்டுமே.
இது போன்ற காரணங்களாலும், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கின் மிக கடுமையான போட்டி காரணமாகவும் பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனையில் சற்று தடுமாறி வருகிறது. இருப்பினும் வரும் மாதங்களில் இதன் விற்பனை எண்ணிக்கை உயருமா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பிளாட்டினா நிச்சயம் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications