அறிமுகமானது புதிய தலைமுறை பல்சர் 125 மற்றும் பல்சர் 150 பைக்குகள்... விலை, சிறப்பம்சங்கள் முழு விபரம்!!
இந்திய இளைஞர்கள் மத்தியில் நீண்ட காலமாக பிரபலமாக இருக்கும் பஜாஜ் பல்சர் பைக்கின் 125சிசி மற்றும்150சிசி மாடல்கள் புதிய தலைமுறை மாடல்களாக மேம்படுத்தப்பட்டு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வடிவமைப்பு, எஞ்சின், வசதிகள் என அனைத்து விதங்களிலும் சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மாடல்கள் வந்துள்ளன.
பஜாஜ் பல்சர் பைக்குகள் சந்தைக்கு வந்து 25ம் ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இவ்வேளையில் இந்த இரண்டு மாடல்களும் பல்வேறு மதிப்புமிக்க அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பல்சர் 125 பைக்கிற்கு ரூ.84,493 எக்ஸ்ஷோரூம் விலையும், புதிய பல்சர் 150 பைக்கிற்கு ரூ.1,15,200 எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் 125 பைக் நான்கு வேரியண்ட்டுகளிலும், பல்சர் 150 பைக் மூன்று விதமான வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

டிசைன்
பழைய பல்சர் பைக் மாடல்களின் அடிப்படை வடிவமைப்பில் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும், முன்பக்கத்தில் புதிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், புதிய வடிவமைப்புடன் பெட்ரோல் டேங்க் மற்றும் கவுல்கள், புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய பல்சரிலிருந்து வேறுபடுத்துகின்றன.
எஞ்சின்
புதிய பல்சர் 125 பைக் மாடலில் 125சிசி ஏர்கூல்டு எஞ்சின் 11.93பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய எஞ்சினைவிட 0.3பிஎச்பி பவரையும், 0.6 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மறுபுறத்தில் பல்சர் 150 மாடலில் இருக்கும் 149.5சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13.6 பிஎச்பி பவரையும், 13.25என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் எளிதாக ஓட்டுவதற்காக கியர் ரேஷியோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்சர் 125 மாடலில் முதல் கியரில் 5 கிமீ வேகத்தில் பைக் எஞ்சின் சக்தியில் எளிதாக நகர்ந்து செல்லும் வகையிலும், 5வது கியரில் 25 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கான Crawl தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே 150சிசி மாடலில் முதல் கியரில் 10கிமீ வேகத்திலும், 5வது கியரில் 30கிமீ வேகத்தில் செல்லும். இதனால், ஓட்டுபவருக்கான சுமை சற்று குறையும்.
இரண்டு பைக்குகளிலும் ஏற்கனவே அறிமுகமான இன்ஜின் தளமே பயன்படுத்தப்பட்டாலும், ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Pulsar 125 மாடலில் 124.4cc இன்ஜினும், Pulsar 150 மாடலில் 149.5cc இன்ஜினும் இடம்பெற்றுள்ளன. இரண்டு பைக்குகளிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

வசதிகள்
இந்த முறை தொழில்நுட்ப வசதிகளில் பஜாஜ் ஆட்டோ அதிக கவனம் செலுத்தி உள்ளது. புதிய பல்சர் மாடல்களில் 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெறுகிறது. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் புளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் SMS அலர்ட்டுகள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் என்ற தகவல்களுடன் மைலேஜ் பற்றிய தகவல்களும் பெற முடியும். யுஎஸ்பி சார்ஜரும் உள்ளது.
புதிய சேஸி
இந்த இரண்டு புதிய தலைமுறை மாடல்களில் முக்கிய அம்சமாக சேஸி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, எடை வினியோகம் சீரானதாக இருக்கும் என்பதால், நகர சாலைகளில் பைக்கை கையாள்வது எளிதாக இருக்கும் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது. தினசரி அலுவலகப் பயணம் மட்டுமின்றி, வார இறுதி நாட்களுக்கான ரைடுகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அனுபவத்தை கொடுக்கும் நோக்கத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விஷயத்திலும் போதுமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேரியண்ட்டைப் பொறுத்து டிஸ்க் பிரேக், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் விருப்பத்தின் பேரில் பெறமுடியும். போன்ற பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன.
இந்தியாவில் 25 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் பல்சர், பஜாஜ் நிறுவனத்தின் மிக முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 125cc மற்றும் 150cc பிரிவுகளில் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கேற்ப புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் இந்த இரண்டு மாடல்களையும் பஜாஜ் களமிறக்கியுள்ளது.
புதிய பஜாஜ் பல்சர் 125 பைக் மாடலானது டிவிஎஸ் ரெய்டர் 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஆகிய மாடல்களுடனும், புதிய பல்சர் 150 பைக் மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். TVS Apache RTR 160 மற்றும் Hero Xtreme 160R போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Click it and Unblock the Notifications


