3.5 ஆண்டுகளாக எப்போது அறிமுகமாகும்னு எதிர்பார்த்த பல்சர் பைக்! இந்த தடவையும் கண்டுப்பிடிப்பா பந்தயம் அடிக்கும்
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் பல்சர் 180 (Pulsar 180) பைக்கை கிட்டத்தட்ட 3.5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்திய இளைஞர்களின் ஃபேவரட் பல்சர் பைக்குகளுள் ஒன்றான இது மீண்டும் வந்திருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய பல்சர் 180 பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன, புதிய அப்கிரேட்கள் (Upgrades) என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடையாளம் என்றால் அவை பல்சர் பைக்குகள் தான். இதனாலேயே 125சிசி-இல் இருந்து 400சிசி வரையில் பல்வேறு விதமான பல்சர் பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்சர் 180 பைக்கை பொறுத்தவரையில், பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து இன் & அவுட் ஆக இதனை விற்பனையில் இருந்து நீக்கியும், மீண்டும் அறிமுகம் செய்தும் வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது மீண்டும் 3.5 வருடங்களுக்கு பின் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பல்சர் 180 பைக்கில் முக்கிய சிறப்பம்சமாக பைக் முழுவதும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, புதிய கிராஃபிக்ஸ் உடன் ஷார்ப்பான லைன்கள் பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க மட்கார்டில் கார்பன்-ஃபைபர் ஃபினிஷிங் (Carbon-fibre Finishing) கொடுக்கப்பட்டுள்ளது.
பைக்கின் இருக்கை இரண்டாக பிரிக்கப்படாமல் சிங்கிள் பீஸாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தோற்றத்துடன் பைக்கை சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய டிசைனிலான ஹெட்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை எல்இடி தரத்தில் உள்ளன. முந்தைய பல்சர் 180 பைக் 2022 ஆகஸ்ட்டில் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமே அது மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை கொண்டில்லாதது தான்.

அட்வான்ஸ்டு டெக்னாலஜிகளை கொண்டில்லாததால் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே புதிய பல்சர் 180 பைக்கில் முக்கியமாக ஃபுல்-டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையை பஜாஜ் வழங்கியுள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity) உடன் உள்ள இந்த திரையின் வாயிலாக மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பைக்கின் திரையின் வாயிலாகவே கண்ட்ரோல் செய்யலாம்.
அத்துடன், பயணத்தின்போது மொபைல் போனை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-ஏ (USB Type-A) சார்ஜிங் போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. பிரேக் சிஸ்டத்தில், முன் சக்கரத்தில் 280 மி.மீட்டரிலும், பின் சக்கரத்தில் 230 மி.மீட்டரிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Single-channel ABS) சிஸ்டமும் புதிய பல்சர் 180 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த பைக்கின் 178.61சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் இ20 பெட்ரோலுக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, எத்தனால் (Ethanol) 20% கலக்கப்பட்ட பெட்ரோலிலும் இந்த பைக் இயங்கும். தற்சமயம் கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இ20 பெட்ரோல் தான் விநியோகிக்கப்படுகிறது. இதனை இந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு நாடு முழுவதும் கட்டாயமாக்கி உள்ளது.
புதிய பல்சர் 180 பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக 16.77 பிஎச்பி மற்றும் 15 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 156 கிலோ எடை கொண்ட இந்த பல்சர் பைக்கில் 15 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்சர் 180 ஆனது ஓர் மத்திய நிலையில் உள்ள பல்சர் பைக் ஆகும். வாடிக்கையாளர்கள் ஒன்று இதற்கு கீழ் உள்ள பல்சர் 125, பல்சர் 150 பைக்குகளை வாங்குகின்றனர்; இல்லையேல் 200சிசி பல்சர் பைக்குகளை வாங்குகின்றனர். குறிப்பிட்ட சில இளைஞர் கூட்டம் மட்டுமே பல்சர் 180 பைக்கை வாங்கி வந்தனர். ஆனால், தற்போது பல முக்கியமான அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளதால், பல தரப்பினரும் இந்த பைக்கை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








