கம்மி விலையில் இந்தியாவில் விரைவில் வெளியாகும் பஜாஜ் பைக் இது தான்
இந்தியாவில் எட்டு புதிய பைக்குகளை அடுத்தடுத்து வெளியிடவிருப்பதாக இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது பஜாஜ். அப்டேட் மற்றும் புதிய பைக்குகள் எல்லாம் சேர்ந்த கலவையாக இந்த எட்டு பைக்குகள் இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அதில் ஒரு பைக்கை தற்போது இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.
சத்தமில்லாமல் ஒரு முழு பைக்கை உருவாக்கியிருக்கிறது பஜாஜ். முழுவதும் மறைக்கப்பட்ட வகையிலேயே இந்த பைக் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்தாலும், பைக்கின் வடிவத்தை வைத்து இது என்ன மாதிரியான பைக் என்பதை நம்மால் எளிதாகக் கூறிவிட முடியும். தற்போது பஜாஜ் சோதனை செய்து வருவது அட்வென்சர் ரகத்தைச் சேர்ந்த ஒரு பைக் மாடலாகும்.

ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அட்வென்சர் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில் பஜாஜிடம் தான் அப்படியான ஒரு பைக் மாடல் இல்லை. பஜாஜ் சோதனை செய்து வரும் புதிய பைக்கின் டிசைனை வைத்துப் பார்க்கும் போது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிற்கு நேரடியாகப் போட்டியளிக்கும் வகையிலேயே இதனை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.
எனவே கண்டிப்பாக 200 சிசிக்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட ஒரு பைக் மாடலாகவே இருக்கும். தற்போது கேடிஎம் நிறுவனம் முழுவதுமாக பஜாஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதன் 200 சிசி அல்லது 250 சிசி இன்ஜினை இந்தப் புதிய பைக்கில் பஜாஜ் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேடிஎம்மின் சில இன்ஜின் பஜாஜின் டாமினார் 400 மற்றும் பல்சர் NS400Z பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் கேடிஎம்மில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எந்த இன்ஜினும் இதுவரை பஜாஜின் எந்த பைக்கிலும் பயன்படுத்தப்படவில்லை. கேடிஎம்மின் பிராண்டு வேல்யூவை தக்க வைத்திருப்பதற்காக இந்த முடிவை பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் சேர்ந்து எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது பஜாஜின் கட்டளைக்கு கீழ் கேடிஎம் இல்லை. இப்போது நிலைமை வேறு, கேடிஎம் முழுவதுமாக பஜாஜின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி கேடிஎம் 250 அட்வென்சர் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 249 சிசி, சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜினை புதிய அட்வென்சர் பைக்கில் பஜாஜ் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், எக்ஸ்பல்ஸின் விலைக்கு அருகில் குறைவான விலையில் விற்பனை செய்யும் பொருட்டு கேடிஎம்மின் 200 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கூட புதிய பைக்கில் பஜாஜ் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது ஒரு முறையான ஆஃப்-ரோடு அட்வென்சர் பைக்காக பஜாஜின் இந்தப் புதிய பைக் இருக்கும் என்றே தெரிகிறது. 200 சிசி இன்ஜினைப் பயன்படுத்தும் பட்சத்தில் எக்ஸ்பல்ஸின் விலைக்கு இணையாக 1.70 லட்சம் முதல் 1.80 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். 250 சிசி இன்ஜினைப் பயன்படுத்தினால் 2 லட்சம் ரூபாயை ஒட்டிய எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய பைக்கை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜிடம் க்ரூஸர், டூரர், ஸ்ட்ரீட் நேக்கட் என அனைத்து வகையான பைக்குகளும் இருக்கின்றன. அட்வென்சர் பைக்குகளைத் தவிர. பஜாஜைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களிடமும் ஏதோவொரு வகையில் அட்வென்சர் பைக்குகள் இருக்கின்றன. எனவே அந்தப் பிரிவில் புதிய பைக் ஒன்றை பஜாஜ் வெளியிட இது சரியான நேரம் தான்.
என்ன விலையில் இந்தப் புதிய பைக்கை பஜாஜ் வெளியிடுகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது. மேலே குறிப்பிட்டிருப்பது போல கேடிஎம்மின் லிக்விட்-கூல்டு இன்ஜின்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் பெர்ஃபாமன்ஸில் குறையேதும் இருக்காது. விலையை மட்டும் சரியாக நிர்ணயித்தால் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை இந்த பஜாஜ் அட்வென்சர் பைக் பெறும்.


Click it and Unblock the Notifications