இனி பல்சர் பைக்கிற்கு பெட்ரோல் போட அதிகமா செலவு ஆகாது! பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் பஜாஜ்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). 125, 150, 160, 180, 200, 220, 250 மற்றும் 400 என பல்வேறு வெர்ஷன்களில் பஜாஜ் பல்சர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் உருவம் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புத்தம் புதிய பஜாஜ் பல்சர் பைக் ஒன்று இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு (Pune) அருகே சாலை சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புத்தம் புதிய பஜாஜ் பல்சர் பைக் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கேமராவின் கண்களில் சிக்கியது.

புனேவில்தான் பஜாஜ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருவது பஜாஜ் பல்சர் பைக்கின் என்ன வெர்ஷன்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அது பஜாஜ் பல்சர் கிளாசிக் 125 அல்லது பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 பைக்குகளின் புதிய தலைமுறை வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் புத்தம் புதிய பஜாஜ் பல்சர் பைக் அனேகமாக வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் இந்த புதிய பஜாஜ் பல்சர் பைக்கை பற்றிய விரிவான தகவல் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த பஜாஜ் பல்சர் பைக் வழக்கமான பெட்ரோல் இன்ஜின் உடன் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் (Flex-Fuel) வெர்ஷனிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அதிகப்படியான எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலிலும் இயங்க கூடிய தன்மையை இது பெற்றிருக்கலாம். இது குறித்து பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் E20 (20 சதவீதம் எத்தனால் + 80 சதவீதம் பெட்ரோல்) எரிபொருள்தான் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை மத்திய அரசு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை (Mumbai), டெல்லி (Delhi) உள்ளிட்ட சில நகரங்களில் தற்போது E85 எரிபொருள் (85 சதவீதம் எத்தனால் + 15 சதவீதம் பெட்ரோல்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் E85 எரிபொருளில் இயங்க கூடிய டூவீலர்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்த ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்கள், E85 எரிபொருளில் இயங்க கூடியவை ஆகும்.
எனவே பஜாஜ் நிறுவனமும் பல்சர் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை பஜாஜ் பல்சர் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் விற்பனைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் E20 எரிபொருளை விட E85 எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 20 ரூபாய் குறைவு ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் பல்சர் பைக்கின் புதிய தலைமுறை மாடலின் விலை, தற்போது விற்பனையில் உள்ள மாடலின் விலையை காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஜாஜ் நிறுவனம் டிசைன் மற்றும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அப்டேட்களை செய்வதால், விலை உயர்வு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications