பஜாஜ் வெளியிட்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. ரேஞ்சு, வசதிகள் எல்லாம் தாறுமாறா இருக்கு!
இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். சேட்டக் லைன்-அப்பில் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் ஐந்து வேரியன்ட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது பஜாஜ். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது பெர்ஃபாமன்ஸ் மற்றும் பயன்பாட்டு அப்டேட்களை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
வழக்கமாக அப்டேட் என்றால், புதிய வசதிகள், டிசைன் மாற்றம் ஆகிய மாற்றங்களே செய்யப்பட்டிருக்கும். ஆனால் சேட்டக் லைன்-அப்பில் ஏற்கனவே இருக்கும் அம்சங்களை பஜாஜ் மேம்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, கூடுதல் பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி சார்ஜிங் வேகம் அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் டிஸ்பிளே போன்ற மேம்பாடுகளைச் செய்திருக்கிறது. இந்த அப்டேட்கள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைன்-அப்பானது C2501, C3001, C3501, C3502 மற்றும் C3503 ஆகிய வேரியன்ட்களைக் கொண்டிருக்கிறது. இவற்றின் பெயர்களை தற்போது C25, C30 மற்றும் C35 என மாற்றியுள்ளது பஜாஜ். அனைத்து வேரியன்ட்களுமே பெர்ஃபாமன்ஸ் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து வேரியன்ட்களுமே முன்பை விட தற்போது அதிக டாப் ஸ்பீடைக் (Top Speed) கொண்டிருக்கின்றன.
C2501 வேரியன்டானது இது வரை அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது மணிக்கு 60 கிமீ வேகமாக அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், C3001 மற்றும் C3503 ஆகிய வேரியன்ட்களின் அதிகபட்ச வேகம் 63 கிமீ-ல் இருந்து 70 கிமீ ஆகவும், C3501 மற்றும் C3502 ஆகிய டாப் எண்டு வேரியன்ட்களின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ ஆகவும் உயர்ந்திருக்கிறது.

C35 சீரிஸ் மற்றும் C30 ஆகிய வேரியன்ட்களில் எக்கோ மற்றும் ஸ்போர்ட் ரைடிங் மோடுகள், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் ஆகய வசதிகள் இனி ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படவிருக்கின்றன. இதுவரை அது கூடுதல் தேர்வாக மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. C3001 வேரியன்டின் சார்ஜிங் வேகம் இதுவரை 3.50 மணி நேரமாக இருந்து வந்த நிலையில், தற்போது அது 2.55 மணி நேரமாக (0-80%) குறைந்திருக்கிறது.
C3501 மற்றும் C3502 ஆகிய டாப் எண்டு வேரியன்ட்களில் இனி ஓவர்-தி-ஏரில் (OTA) சாஃப்ட்வேர் அப்டேட்களைக் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது பஜாஜ். எனவே இதற்காக இனி சர்வீஸ் செண்டர் செல்ல வேண்டிய அவசியமில்லை. ரேஞ்சைப் பொறுத்தவரை அடிப்படையான C2501 வேரியன்டே குறைந்தபட்சமாக 113 கிமீ ரேஞ்சைக் கொண்டுள்ளது. C3001 மற்றும் C35 சீரிஸ் வேரியன்ட்கள் முறையே 127 கிமீ மற்றும் 153 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளன.
டாப் எண்டு வேரியன்டான 3501-ல் சேட்டக் செயலி மூலமாக கூகுள் மேப் நேவிகேஷனை இன்டகிரேட் செய்து கொள்ளும் வசதியை புதிய அப்டேட்டில் பஜாஜ் வழங்கியிருக்கிறது. இந்த அப்டேட்களின் முக்கியமான அம்சமே, இத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை பஜாஜ் உயர்த்தவில்லை என்பது தான். இதுவரை என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததோ, அப்டேட்டிற்கு பிறகும் அதே விலையிலேயே சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
வேரியன்ட் வாரியாக சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் பின்வருமாரு.
C2501 - ரூ.89,500
C3001 - ரூ.99,500
C3503 - ரூ.1.02 லட்சம்
C3502 - ரூ.1.22 லட்சம்
C3501 - ரூ.1.34 லட்சம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மேம்பாடுகளுடன் முன்பை விட விலைக்கேற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக மாறியிருக்கிறது புதிய சேட்டக் லைன்-அப். இது போன்ற பயன்பாட்டு நிலை அப்டேட்கள் வரவேற்கத்தக்கது தான். ரூ.1 லட்சம் விலைக்குள் சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இப்போது இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த தேர்வாக இந்த சேட்டக்கைத் தவிர வேறு எதையும் கூற முடியாது.


Click it and Unblock the Notifications