ரூ.7.22 லட்சத்தில் பெனெல்லியின் அட்டகாசமான டூரிங் பைக்குகள் அறிமுகம்!
இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கும் சாகசப் பயணங்களுக்கும் ஏற்ற அட்வென்ச்சர் பைக்குகளை வாங்க விரும்புவோரைக் குறிவைத்து, பெனெல்லி நிறுவனம் புதிய டிஆர்கே 552 (TRK 552) மற்றும் டிஆர்கே 552X (TRK 552X) பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் புதிய 554 சிசி எஞ்சின், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு உதவும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய பெனெல்லி டிஆர்கே 552 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.22 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்ரோடு பயணங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் டிஆர்கே 552X பைக்கின் விலை ரூ.7.74 லட்சமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் லிமிடெட் எடிஷன் மாடல் ரூ.7.90 லட்சம் விலையில் கிடைக்கும். இந்த பைக்குகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பெனெல்லி மற்றும் கீவே டீலர்ஷிப்புகள் வாயிலாக புக்கிங் செய்து வாங்கலாம்.

எஞ்சின் விபரம்
இந்த இரண்டு பைக்குகளிலும் 554 சிசி, லிக்யூடு கூல்டு, பேரலல் ட்வின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 52 எச்பி பவரையும் 49 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது சீரான செயல்திறனை வழங்குவதுடன், கியர்களைக் குறைக்கும்போது கியரை கட்டுப்படுத்தவும் ஸ்லிப்பர் கிளட்ச் உதவும். இதனால் பயணத்தின் போது பைக்கை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.
முக்கிய அம்சங்கள்
புதிய டிஆர்கே 552 மற்றும் டிஆர்கே 552X பைக்குகளில் 5 இன்ச் டிஎஃப்டி (TFT) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் இணைப்பு, நேவிகேஷன் மற்றும் டி-பாக்ஸ் (T-BOX) இணைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. வழித்தடத்தைத் திட்டமிடுதல், பயணத்தின்போது வழிகாட்டுதல், இணைய இணைப்பு இல்லாமலும் வரைபடத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே பயணித்த வழியை மீண்டும் கண்டறிதல் போன்ற வசதிகள் நீண்ட தூரப் பயணங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இரண்டு பைக்குகளிலும் டயர் காற்றழுத்தக் கண்காணிப்பு அமைப்பு (TPMS) வழங்கப்பட்டுள்ளது. டயர்களில் காற்றழுத்தம் வழக்கத்திற்கு மாறாக இருக்கும்போது எச்சரிக்கை பெற இது உதவும். குளிர்ச்சியான காலநிலையில் பயணிப்போருக்காக ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் ஹீட்டட் சீட் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டிற்குமான வித்தியாசம்
இந்த இரண்டு பைக்குகளும் அவற்றின் சக்கரங்கள், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நடைமுறை பயன்பாட்டு அம்சங்களை பொறுத்து வேறுபடுகிறது.
டிஆர்கே 552 பைக் பெரும்பாலும் தார்ச்சாலைகளில் பயணிப்பதற்கும் நீண்ட தூர டூரிங்கிற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 17 அங்குல அலாய் சக்கரங்கள், முன்புறத்தில் 120/70 ZR17 அளவிலான பைரெல்லி டயர் மற்றும் பின்புறத்தில் 160/60 ZR17 அளவிலான பைரெல்லி டயர் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மிமீ ஆகவும், சீட் உயரம் 835 மிமீ ஆகவும் உள்ளது.
மறுபுறம், டிஆர்கே 552X பைக் சாகசப் பயணங்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் செல்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்புறம் 19 அங்குல ஸ்போக் வீலும், பின்புறம் 17 அங்குல ஸ்போக் வீலும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மெட்ஸிலர் அட்வென்ச்சர் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ ஆகவும், சீட் உயரம் 860 மிமீ ஆகவும் உள்ளது. இதனால் சீரற்ற பாதைகளில் பயணிக்க கூடுதல் வசதி கிடைக்கும். ஆனால், இதன் அதிகமான சீட் உயரம் காரணமாகக் குறைந்த உயரம் கொண்டவர்கள் பைக்கைத் தேர்வு செய்வதற்கு முன்பு நேரில் அமர்ந்து ஓட்டி பார்த்து வாங்குவது நல்லது.
பாதுகாப்பு அம்சங்கள்
இரண்டு பைக்குகளிலும் டியூபுலர் ஸ்டீல் டிரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 50 மிமீ மார்சோக்கி யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்புறத்தில் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளன. பிரேக்கிங்கிற்காக முன்புறத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் பாஷ் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு வசதியும் உள்ளது.
இரண்டு மாடல்களிலும் 20 லிட்டர் எரிபொருள் டேங்க், கூடுதல் பேடிங் கொண்ட இருக்கைகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேண்டில்பார் மற்றும் புதிய ஹேண்ட் கார்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வசதிகள் நீண்ட தூரப் பயணங்களில் ஓட்டுநரின் சோர்வைக் குறைக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த பைக்கைத் தேர்வு செய்யலாம்?
நெடுஞ்சாலைப் பயணங்கள், நகரப் பயன்பாடு மற்றும் நீண்ட தூர டூரிங் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு பெனெல்லி டிஆர்கே 552 பொருத்தமான தேர்வாக இருக்கலாம். அதே நேரத்தில், மலைப்பாதைகள், சீரற்ற சாலைகள் மற்றும் சாகசப் பயணங்களை விரும்புவோருக்கு டிஆர்கே 552X கூடுதல் கவனத்தை ஈர்க்கும்.
இரண்டு பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளுக்கும் இடையே ரூ.52,000 வித்தியாசம் உள்ளது. எனவே, வாங்குபவர்கள் தங்களின் பயணத் தேவைகள், பைக்கின் எடை மற்றும் இருக்கை உயரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம். இந்த இரண்டு மாடல்களின் எடை தலா 235 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


