இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் இப்போ மக்கள் வாங்கி குவிச்சுட்டு இருக்காங்.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய எலெகட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் ஏத்தர் எனர்ஜி, 6 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை சுமார் 6,04,497 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது அந்நிறுவனம்.
2018ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. ஆனால் மேற்கூறிய மைல்கல் விற்பனை அளவில் 50%, அதாவது 3 லட்சம் யூனிட்டுகளை கடைசி 1.4 ஆண்டுகளில் மட்டும் விற்பனை செய்துள்ளது. ஆம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் தொடங்கிய முதல் ஏழு ஆண்டுகளில் 3 லட்சம் யூனிட்டுகளையும், அடுத்த 1.4 ஆண்டுகளில் அடுத்த 3 லட்சம் யூனிட்டுகளையும் விற்பனை செய்துள்ளது.

இந்த விற்பனை அளவு இறண்டு விஷயங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஒன்று இந்தியாவில் ஏத்தர் எனர்ஜி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிறுவனமாக மாறி விட்டது. இரண்டாவது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெரிய அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கூட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மட்டுமே இந்தியாவில அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது.
ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் என அனைத்து நிறுவங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் சமஅளவில் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மேல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. ஏத்தரின் இந்த விற்பனை அளவைக் கொண்டு, ஏத்தர் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நாம் அளவிட்டுக் கொள்ளலாம்.

2018ல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைத் தொடங்கிய ஏத்தர், 2023-லேயே முதல் 1 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை இலக்கைப் பதிவு செய்கிறது. அதனைத தொடர்ந்து இரண்டாவது ஒரு லட்சம் யூனிட்டுகள் விற்பனையை 2024ல் பதிவு செய்கிறது. கடந்த 2025ம் ஆண்டு மட்டும் 2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது ஏத்தர் எனர்ஜி.
தொடர்ந்து இந்த 2026ம் ஆண்டு நான்கு மாதங்கள் முழுமையாக நிறைவடைய ஒரு வார காலம் இருக்கும் நிலையிலேயே கிட்டத்தட்ட ஒரு லட்சம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அளவை எட்டியுள்ளது. இந்தாண்டு முடிவில் சுமார் 3 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலான விற்பனையை அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 2026ம் ஆண்டு ஒட்டுமொத்தமாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை, யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய உயரங்களை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது ரிஸ்டா, ஏத்தர் 450 மற்றும் 450 ஏபெக்ஸ் ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் விலை குறைவான ஸ்கூட்டர் மாடல் ரிஸ்டா தான். இந்த மாடலே தற்போது ஏத்தரின் 70-75 சதவீத விற்பனைக்கும் காரணமாக இருந்து வருகிறது. ரிஸ்டா ஸ்கூட்டரே ஏத்தரை மெயின்ஸ்ட்ரீட் நிறுவனங்களின் வரிசையில் கொண்டு சென்று அமர்த்தியிருக்கிறது.
ஏத்தர் 450 ஸ்கூட்டர் மாடலானது ஸ்போர்ட்டியான ஒன்றாக இருக்கும் நிலையில், அதே ஸ்போர்ட்டினஸுடன் மேம்பட்ட வசதிகள் கொண்ட ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 450 ஏபெக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளை வெளியிடவும் ஏத்தர் எனர்ஜி திட்டங்களை வைத்துள்ளது. பட்ஜெட் விலையில் மேலும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக EL என்ற புதிய பிளாட்ஃபார்மை ஏத்தர் எனர்ஜி உருவாக்கி வருகிறது.
அத்துடன் எலெக்ட்ரிக் பைக்குகளுக்காக ஸெனித் என்ற புதிய பிளாட்ஃபார்மையும் அந்நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏத்தரின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஓசூரில் இருக்கும் அதன் இரண்டு தொழிற்சாலைகளிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது தொழிற்சாலையை மகராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜி நகரில் அமைத்து வருகிறது ஏத்தர் எனர்ஜி.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் அதன் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 4.20 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன. மகராஷ்டிராவில் அமைத்து வரும் புதிய தொழிற்சாலையை ஆண்டுக்கு 10 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் திறனுடன் ஏத்தர் கட்டமைத்து வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் முதற்கட்ட கட்டமைப்பு முடிவடைந்து ஜூலை மாதம் செயல்பாட்டிற்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு தற்போது முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் போட்டியிடும் அளவிற்கு ஏத்தர் எனர்ஜி வளர்ந்திருக்கிறது. வேகமாக வளர்ந்து, வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்த ஓலா எலெக்ட்ரிக்கைப் போல இல்லாமல், தங்களது ஒவ்வொரு நகர்வையும் தீர ஆராய்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக மாறியிருக்கிறது ஏத்தர்.
வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை விற்பனையில் பெருவெடிப்புக்குத் தயாராகி வருகிறது. அதனை முன்னணின்று நடத்துவதில் ஏத்தர் எனர்ஜி முக்கியப் பங்கு வகிக்கும். வரும் ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்கும் கீழான விலையில் ஏத்தரின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications