145 கிமீ ரேஞ்ச், ரூ.1.23 லட்சம் விலை... புதிய பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!
நகர்ப்புறத்தில் மிக எளிதாக ஓட்டுவதற்கான அம்சங்களுடன் கூடிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிகாஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிகாஸ் ஊவா மேக்ஸ் ப்ளஸ் (OoWah Max Plus) என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. ரூ.1.23 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி மற்றும் சார்ஜரின் விலையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிகாஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிகாஸ் OoWah EX என்ற பெயரிலான மாடலின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட் மாடலாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஊவா மேக்ஸ் பிளஸ் என்ற புதிய மாடலில் அதிக திறன் வாய்ந்த பேட்டரி, கூடுதல் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது.

ஊவா மேக்ஸ் ப்ளஸ் மாடலில் 3kWh எல்எஃப்பி பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் 2.4kWh பவரை வெளிப்படுத்தும் பிஎம்எஸ்எம் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பேட்டரியானது கழற்றி மாட்டும் வசதியுடன் இருக்கிறது. இதன்மூலமாக, ஸ்கூட்டர் நிறுத்துமிடத்தில் பேட்டரி சார்ஜர் பொருத்த முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு பேட்டரியை வீட்டுக்குள் எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்ற முடியும்.
இந்த புதிய 3kWh எல்எஃப்பி பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த புதிய மாடலானது அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் டாப்ஸ்பீடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மற்றும் மின் மோட்டார் ஆகியவை ஐபி67 பாதுகாப்பு தர பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.
இந்த மாடலில் 750W சார்ஜர் எந்த கூடுதல் விலையும் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலமாக 0-80 சதவீதம் என்ற அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 3 மணிநேரம் 30 நிமிடங்கள் பிடிக்கும். 0-100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 4 மணிநேரம் 55 நிமிடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1350W சார்ஜர் பயன்படுத்தினால் 2 மணிநேரம் 50 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும்.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 104 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளதால் பெண்களுக்கு எளிதான கையாளுமையும், ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும். மேலும், தரையிலிருந்து இருக்கையானது 765 மிமீ ஆகவும், 160 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் இருக்கைக்கு கீழே 21 லிட்டர் கொள்ளவு கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.
எல்இடி ஹெட்லைட்டுகள், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர், இந்த வாகனத்திற்கும் சார்ஜருக்கும் சேர்த்து 3 ஆண்டுகள் அல்லது 36,000கிமீ தூரத்திற்கான வாரண்டியும், பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. வாரண்டியை 75,000 கிமீ தூரம் வரை நீட்டித்துக் கொள்வதற்கான திட்டமும் இருக்கிறது.
புதிய பிகாஸ் ஊவா மேக்ஸ் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு ரூ.1,22,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எமரால்டு ஷேடோ, ஜாமூன் பன்ச், டேங்கி டோமா மற்றும் ஸெஸ்டி ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். மறுபுறத்தில் ஊவா இஎக்ஸ் மாடலானது ரூ.94,990 எக்ஸ்ஷோரூம் விலையில் தொடர்ந்து கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications