பைக்குகளின் ஹெட்லைட் விதிகளில் வருகிறது அதிரடி மாற்றம்! புதிய வாகனங்களுக்கு வருகிறது கட்டுப்பாடு
இரவு நேரத்தில் பைக் ஓட்டும்போது எதிரே வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணை கூச வைத்த அனுபவம் பெரும்பாலானோருக்கு இருக்கும். குறிப்பாக, தேவையில்லாமல் ஹை பீம் பயன்படுத்தும் வாகனங்களால் சில நொடிகளுக்கு சாலையே தெரியாமல் போகும் சூழலும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாகனங்களின் ஹெட்லைட் விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகளில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், குறிப்பாக புதிதாக விற்பனைக்கு வரும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஹெட்லைட் செயல்படும் விதத்தில் மாற்றம் ஏற்படலாம்.

லோ பீம் மட்டும்?
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் தானியங்கி முறையில் ஒளிரும் ஹெட்லைட் (AHO) வசதி உள்ளது. அதாவது, பைக் அல்லது ஸ்கூட்டர் இயங்கும்போது ஹெட்லைட் தானாகவே எரியும் வகையில் இந்த வசதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய முன்மொழிவின்படி, இனி புதிதாக தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களில் இந்த ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் செயல்பாடு லோ பீமிற்கு மட்டுமே வழங்கப்படும்.
இதனால், தேவைப்படும் சூழ்நிலையில் மட்டும் பைக் ஓட்டுபவர் ஹை பீமை தேர்வு செய்ய முடியும். மேலும், இந்த விதி ஏற்கனவே சாலையில் ஓடும் பைக்குகளுக்கு பொருந்தாது. விதிமுறை அமலுக்கு வந்த பிறகு தயாரிக்கப்படும் புதிய இருசக்கர வாகனங்களுக்கே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹை பீமுக்கும் கட்டுப்பாடு
பைக்குகளின் ஹெட்லைட் தொடர்பான மாற்றம் இதோடு முடியவில்லை. ஹை பீம் வெளிச்சத்தின் தீவிரத்தையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி இருசக்கர வாகனங்களின் ஹெட்லைட் அதிகபட்சமாக 1.5 லட்சம் candela என்ற அளவு வரை ஹெட்லைட் வெளிச்சத்தின் அளவு இருக்கலாம். முன்மொழியப்பட்ட புதிய விதிகளின்படி, இது 1 லட்சம் candela என்ற அளவில் குறைக்கப்படும்.
கார்களுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடு வர உள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச ஹெட்லைட் வெளிச்சத்தின் அளவு 2.25 லட்சம் candela என்பதில் இருந்து 1.5 லட்சம் candela என்று குறைக்கப்படலாம். Candela என்பது ஒரு விளக்கிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் தீவரத்தை அளவிட பயன்படுத்தப்படும் அலகு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மாற்றம்?
இரவு நேரத்தில் அதிக சக்தி கொண்ட ஹை பீம் விளக்குகள் எதிரே வரும் டிரைவர் அல்லது ரைடரின் கண்களை நேரடியாக தாக்கும்போது, சில நொடிகளுக்கு பார்வை பாதிக்கப்படலாம். அந்த நேரத்தில் சாலையில் இருக்கும் தடைகள், வளைவுகள் அல்லது எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், ஹெட்லைட் வெளிச்சத்தை குறைப்பதுடன் தேவையில்லாமல் ஹை பீம் பயன்படுத்தப்படும் வாய்ப்பையும் குறைப்பதே இந்த விதிமுறை மாற்றங்களின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
எப்போது அமலாகும்?
தற்போது இது மத்திய மோட்டார் வாகன விதிகளில் முன்மொழியப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகனத் தயாரிப்பாளர்களின் கருத்துக் கேட்பு பணிகளுக்கு பிறகு, தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முடிவடைந்தால், புதிய விதிகள் வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications