நாளை மார்க்கெட்டுக்கு வரும் புதிய BMW பைக் மீதுதான் எல்லாரது கவனமும்... டிவிஎஸ் உதவியால் பந்தயம் அடிக்குமா?
பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) மோட்டார்சைக்கிள் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளின் விற்பனை கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் நிறுத்தப்பட்டது. அதன் இடத்தை நிரப்பும் விதமாகவே புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் களமிறக்குகிறது. ஏனெனில், இரண்டுமே அட்வென்ச்சர் (Adventure) ரக மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

ஆனால், ஜி 310 ஜிஎஸ் பைக்கை விட இலட்சக்கணக்கில் விலை அதிகமாக ரூ.5.50 லட்சம் என்கிற அளவில் புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு விலை அதிகமாக எதிர்பார்க்கப்படுவதற்கு காரணம், அதிக சிசி என்ஜினை பெற்று வருகிறது என்பது மட்டுமின்றி, 350சிசி-க்கு மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டி (GST)-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் அதிகரித்ததும் ஆகும்.
புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளுக்கு விற்பனையில் போட்டியாக உள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) பைக் சமீபத்தில்தான் 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எஃப் 450 ஜிஎஸ் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் (R 1300 GS) மோட்டார்சைக்கிளை போன்று ஷார்ப்பான டிசைனை கொண்டுள்ளது.

செதுக்கப்பட்டது போன்றதான டிசைனில் பெட்ரோல் டேங்க், முரட்டுத்தனமான டிசைனில் சைடு பேனல்கள் மற்றும் ஹெட்லைட் பேனல்கள் உடன் இணைக்கப்பட்ட முன்பக்க மட்கார்ட் உள்ளிட்டவற்றுடன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தை புதிய எஃப் 450 ஜிஎஸ் பைக் கொண்டுள்ளது. மேலும், முன்பக்கத்தில் X வடிவில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டிஆர்எல்-கள் பைக்கிற்கு மாடர்னான தோற்றத்தை வழங்குகின்றன.
அதேநேரம், பின்பகுதி நன்கு நீளமானதாக வழங்கப்படுவதால் இந்த பைக்கை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமின்றி அன்றாட தினசரி நகர்புற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், இந்த பைக்கின் ஃபுல்-டிஜிட்டல் டிஎஃப்டி டிஸ்பிளே ஆனது ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வசதி உடன் ரைடருக்கு தேவையான அடிப்படை தகவல்களை வழங்கக் கூடியதாக உள்ளது.
இதனுடன், எளிமையாக பயன்படுத்தக்கூடிய ரைடு க்ளட்ச், அட்ஜெஸ் செய்யக்கூடிய லிவர்கள் மற்றும் கூடுதல் சவுகரியத்திற்காக ஹீட்டட் க்ரிப்கள் உள்ளிட்டவற்றையும் வெளிநாடுகளில் பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பைக் பெறுகிறது. மேலும், இந்த பைக்கின் 'குயிக் ஷிஃப்டர் புரோ' (Quickshifter Pro) தொழிற்நுட்பம் ஆனது க்ளட்ச்சை பயன்படுத்தாமல் கியர் மாற்றங்களுக்கு உதவக் கூடியது ஆகும்.
இந்த பைக்கில் 450சிசி இணையான-இரட்டை சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 48 எச்பி மற்றும் 43 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ-இல் யுஎஸ்டி ஃபோர்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்கிறது. இருப்பினும், மத்திய அரசின் 350சிசி மற்றும் அதற்கும் குறைவான பைக்குகளுக்கான குறைந்த ஜிஎஸ்டியை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 350சிசி என்ஜின் உடன் எஃப் 450 ஜிஎஸ் பைக்கை களமிறக்காதது வணிக ரீதியாக பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு நஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications