பெயர் தான் பி.எம்.டபிள்யூ பைக்... ஆனா உற்பத்தி மொத்தமும் டிவிஎஸ் ஆலையில்! உடனே டெலிவிரி பெற புக்கிங்கை போடுங்க
பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் எஃப்450 ஜிஎஸ் (F450 GS) மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை இந்தியாவில் துவங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளின் போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக தற்போது இந்த பிஎம்டபிள்யூ பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் குறைந்த விலையில், எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஒரு அட்வென்ச்சர் பைக்கை களமிறக்க கடந்த பல மாதங்களாவே பிஎம்டபிள்யூ நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் வெளிப்பாடாக, புதிய எஃப்450 ஜிஎஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்போது இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் புதிய எஃப்450 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம்களில் முன்பதிவு செய்யலாம். இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது ரூ.5.5 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது வழக்கமான சாதாரணமான சாலைகள் மற்றும் கரடுமுரடான ஆஃப்-ரோடுகள் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடியது ஆகும். விற்பனையில் இது ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) பைக்குகளுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

இந்த புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கின் முன்பக்கத்தில் X-வடிவ டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட்கள், ஹெட்லைட்டிற்கான கௌல், இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் தலைகீழான எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இயக்க ஆற்றலை வழங்க 420சிசி இரட்டை-சிலிண்டர் DOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 47.8 பிஎஸ் ஆற்றல் மற்றும் 43 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இரு திசைகளில் செயல்படக்கூடிய குயிக்ஷிஃப்டர் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எஃப்450 ஜிஎஸ் பைக்கில் ஜிஎஸ் டிராபி (GS Trophy) என்கிற விலைமிக்க டாப் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எஃப்450 ஜிஎஸ் டிராபி வேரியண்ட்டில் ERC எனப்படும் ஈசி ரைடு க்ளட்ச் கூடுதலாக கிடைக்கும். எளிமையான ஹேண்ட்லிங் மற்றும் கண்ட்ரோலுக்காக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் புதிய எஃப்450 ஜிஎஸ் பைக்கை 178 கிலோ எடையில் உருவாக்கியுள்ளது. இந்த பைக்கில் ரைடர் இருக்கை ஆனது தரையில் இருந்து 845மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அட்வென்ச்சர் ரக பைக் என்பதால், இந்த பைக்கின் முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் சற்று சிறியதாக 17 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன. முன் சக்கரத்தில் 310மிமீ-லும், பின் சக்கரத்தில் 240மிமீ-லும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) வசதியும் இந்த பைக்கில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ மோடார்ராட் நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பே எஃப்450 ஜிஎஸ் பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. அதனால்தான், மத்திய அரசாங்கம் 350சிசி-க்கு மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டி (GST)-ஐ அதிகரித்த போதிலும், இந்த பைக்கை 420சிசி என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் கொண்டுவருகிறது.
இதன் காரணமாகவே இந்த பைக்கின் விலை அதிகமாக ரூ.5.5 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்கின் விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டுமெனில், 350சிசி என்ஜின் உடன் எஃப்450 ஜிஎஸ் பைக்கை அறிமுகம் செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








