புதிய பிஎம்டபிள்யூ எஃப் 450 ஆர்ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்... இந்தியாவுக்கு எப்போது?
பட்ஜெட் வகையிலான பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் (Sportsbike) பிரிவில் தனது புதிய மாடலான எஃப் 450 ஆர்ஆர் (BMW F 450 RR) பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே எஃப் 450 ஜிஎஸ் (F 450 GS) அட்வென்ச்சர் பைக் மற்றும் எஃப் 450 ஆர் (F 450 R) நேக்கட் ரக பைக்குகளை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த புதிய மாடல் அந்நிறுவனத்தின் 450 சிசி பைக் குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினராக இணைந்துள்ளது.
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஆர்ஆர் பைக் முழுமையான ஃபேரிங் அமைப்புடன் (Full Fairing) உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட இரட்டை எல்இடி ஹெட்லைட் வடிவமைப்பு, கூர்மையான பாடி பேனல்கள் மற்றும் முன்புற ஃபேரிங்கில் பொருத்தப்பட்ட விங்லெட்கள் (Winglets) ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட எஸ் 1000 ஆர்ஆர் (S 1000 RR) சூப்பர்ஸ்போர்ட்ஸ் பைக்கின் வடிவமைப்பு அம்சங்களை நினைவூட்டும் வகையில் இதன் தோற்றம் அமைந்துள்ளது. குறிப்பாக, தாழ்வான முன்புற அமைப்பு, உயர்ந்து செல்லும் பின்புற பகுதி மற்றும் ஸ்போர்ட்டியான இருக்கை அமைப்பு ஆகியவை வேகமாக ஓட்டுவதற்கு ஏற்ற தோற்றத்தை வழங்குகின்றன.
இரட்டை சிலிண்டர் எஞ்சின்
இந்த பைக்கில் 420 சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் (Parallel-Twin) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 48 எச்பி திறனை 8,750 ஆர்பிஎம்மிலும், 43 என்எம் டார்க்கை 6,750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அமைப்பு ஏற்கெனவே அறிமுகமான எஃப் 450 ஜிஎஸ் மற்றும் எஃப் 450 ஆர் மாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

சஸ்பென்ஷன், பிரேக்கிங் வசதிகள்
இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் (USD Fork) சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட் சஸ்பென்ஷன் தொகுப்பில் முன்புற சஸ்பென்ஷனின் கம்ப்ரெஷன் மற்றும் ரீபவுண்ட் அமைப்புகளையும், பின்புற சஸ்பென்ஷனின் தேவையான வகையில் அட்ஜெஸ்ட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்.
முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. மேலும், இரு சக்கரங்களிலும் 17 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை சேனல் ஏபிஎஸ் (ABS) மற்றும் மேம்பட்ட பிரேக்கிங் கட்டுப்பாட்டு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

டிஎஃப்டி திரை, ரைடிங் மோடுகள்
இந்த பைக்கில் 6.5 இன்ச் டிஎஃப்டி (TFT) இன்ஸ்ட்ரூமென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, மழை, சாலை மற்றும் ரேஸ் உள்ளிட்ட ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் ரைடர் உதவி வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. வேரியண்ட்டைப் பொறுத்து வசதிகள் மாறுபடும்.
உயர்நிலை வேரியன்ட்களில் ஷிப்ட் அசிஸ்டென்ட் புரோ (Shift Assistant Pro) எனப்படும் குயிக் ஷிஃப்டர் வசதி மற்றும் கூடுதல் ரைடிங் மோடுகள் கிடைக்கின்றன. டாப் வேரியன்ட்டில் ஈஸி-ரைடு கிளட்ச் (Easy-Ride-Clutch) வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிளட்ச் பயன்பாட்டை குறைத்து கியர் மாற்றும் அனுபவத்தைப் பெற முடியும்.
இந்தியாவில் எப்போது அறிமுகம்?
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஆர்ஆர் பைக் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதி மற்றும் விலை குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் அறிமுகமாகும்போது இதன் விலை ரூ.4.80 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு வந்தால், ஏப்ரிலியா ஆர்எஸ் 457 (Aprilia RS 457) மற்றும் கவாஸாகி நிஞ்ஜா 500 (Kawasaki Ninja 500) போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இது போட்டியாக அமையலாம்.


Click it and Unblock the Notifications



