BMW பைக்கை காப்பியடிச்சு டிவிஎஸ் உருவாக்கும் பைக் இதுதானா!! சாலையில் முதல்முறையாக...!!
இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்துடனான தனது கூட்டு முயற்சியின் மூலம், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் புதிய அதிகப்படியான விலையிலான பைக் பிரிவிற்குள் நுழைய ஆயத்தமாகி வருகிறது. டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ இடையேயான இந்த ஒருங்கினைந்த திட்டம், ஆரம்பத்தில் 310சிசி சிங்கிள்-சிலிண்டர் தளத்துடன் தொடங்கியது. தற்போது, இது 450சிசி இணையான-இரட்டை சிலிண்டர் தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய தளத்தின் மூலம் வெளிவந்த முதல் மோட்டார்சைக்கிள், பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (F450 GS) என்கிற அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். இருப்பினும், பன்முக வகைகளில் மேலும் பல மோட்டார்சைக்கிள்கள் இந்த இரு பிராண்ட்களில் இருந்தும் வரவிருக்கின்றன. இந்த வரிசையில் ஒரு புது சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் தற்போது சோதனை ஓட்டத்தின்போது முதல்முறையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்450 (Apache RR450) ஆக இருக்குமா அல்லது பிஎம்டபிள்யூ எஃப்450 ஆர்ஆர் பைக் ஆக இருக்குமா என்பதே இப்போதைய கேள்வி. ஆனால் எப்படியிருந்தாலும், இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் டிவிஎஸ்-பிஎம்டபிள்யூவின் புதிய 450சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் பைக் தளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாக இருக்க போகிறது.
மிதுன் தேஷ்முக் என்பவர் இந்த சோதனை வாகனத்தை நெடுஞ்சாலையில் படம் பிடித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள், மிகவும் கவர்ச்சிகரமான ஒரு சூப்பர்ஸ்போர்ட் இயந்திரம் வரவிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த சோதனை வாகனம் முழுமையாக பேனல்கள் நிரம்பிய ஃபேரிங்குடன் காணப்படுகிறது. முழுமையான உருமறைப்புக்காக, ஒரு பெட்டி போன்ற அமைப்பு பைக்கின் முன்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், சில அம்சங்கள் பெரிதாகவும் விகிதாச்சாரமற்றதாகவும் காட்சியளிக்கிறது.

உற்பத்திக்கான மாடல் கண்டிப்பாக நேர்த்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிற நம்பர் பிளேட்டை கொண்டுள்ளது. ஏனெனில், பொதுவாக இவ்வாறான சோதனை வாகனங்கள் தற்காலிக சிவப்பு நிற நம்பர் பிளேட்டை கொண்டிருப்பதே வழக்கம். மேலும், ஃபேரிங் பொருத்தப்பட்ட ORVM-கள், கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், உறுதியான ரைடிங் பொசிஷன் மற்றும் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை அமைப்பு போன்ற சூப்பர்ஸ்போர்ட் அம்சங்களையும் இது கொண்டுள்ளது.
வாகனத்தின் பின்புறத்தில், பிரேக் விளக்குகள் டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இந்த பைக்கில் பிரீமியம் தரத்திலான ஹைலைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன் பகுதியில் USD டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ-ஷாக் யூனிட்டும் சஸ்பென்ஷனுக்கு உள்ளன. இவை முழுமையாக சரிசெய்யக்கூடியவைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு 17 இன்ச் அலாய் சக்கரங்களிலும் சிங்கிள்-டிஸ்க் பிரேக் அமைப்புடன், சிறந்த கிரிப் கொண்ட டயர்கள் வழங்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் அதன் ஹெட்லைட்தான். இது செங்குத்தாக அடுக்கி வைக்கப்பட்ட இரண்டு அறைகளைக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் குறைந்த மற்றும் அதிக பீம்களுக்கு தனித்தனியான வசதிகள் இருக்கலாம்.
2025ஆம் ஆண்டு மிலனில் நடந்த EICMA கண்காட்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 'டேன்ஜென்ட் ஆர்ஆர் (Tangent RR)' என்கிற கான்செப்ட் வாகனத்தை காட்சிப்படுத்தியிருந்தது. அதன் ஹெட்லைட் பாரம்பரியமான பிளவுபட்ட கண் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருந்தது. மேலும், முன்சக்கரத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பும் அதில் இருந்தது. இவையிரண்டும் தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ள வாகனத்தில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில வேறுப்பாடுகள் இருப்பினும், டேன்ஜென்ட் ஆர்ஆர் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்டதாகவே தற்போது சோதனை ஓட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பைக்கை கருதுகிறோம். மோனோகோக் சப்-ஃப்ரேமை கொண்டிருக்கும் இந்த பைக் ஆனது நடுத்தர எடைப் பிரிவில் அசாதாரணமானதாக இருக்கும். இந்த தயாரிப்பு மாடல், EICMA 2026 கண்காட்சியில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









