பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம்!
இந்தியாவில் ரெட்ரோ தோற்றம் கொண்ட பிரீமியம் பைக்குகளுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA Motorcycles) நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 (Gold Star 650) பைக்கில் இரண்டு புதிய எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள இந்த புதிய மாடல்கள், வித்தியாசமான நிறங்கள் மற்றும் கூடுதல் பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வருகின்றன.
புரூக்லேண்ட்ஸ் பிளாக் லெகசி எடிஷன் (Brooklands Black Legacy Edition), பர்மிங்காம் ப்ளூ (Birmingham Blue) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய எடிஷன்களும் தோற்றத்தில் தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.

புதிய எடிஷன்களின் விலை?
பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் பர்மிங்காம் ப்ளூ எடிஷனுக்கு ரூ.3,55,950 எக்ஸ்ஷோரூம் விலையிலும், புரூக்லேண்ட்ஸ் பிளாக் லெகசி எடிஷன் ரூ.3,64,950 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இரண்டு மாடல்களுக்கும் இடையே ரூ.9,000 வரை விலை வித்தியாசம் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்ஏ ஷோரூம்களில் இந்த புதிய மாடல்கள் தற்போது விற்பனைக்கு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புரூக்லேண்ட்ஸ் பிளாக் லெகசி எடிஷன்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற புரூக்லேண்ட்ஸ் பந்தய களத்துடன் தொடர்புடைய பிஎஸ்ஏ நிறுவனத்தின் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 1937ம் ஆண்டு இந்த பந்தய களத்தில் பிஎஸ்ஏ ரைடர் வால் ஹேண்ட்லியின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மூலமாக கோல்டு ஸ்டார் பேட்ஜ் பெற்று கோல்டு ஸ்டார் பெயர் புகழ்பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில், பைக்கிற்கு அடர் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சு கொண்ட முன் மற்றும் பின் மட்கார்டுகளில் தங்க நிறக் கோடுகள் இடம்பெற்றுள்ளன. எரிபொருள் டேங்கிலும் குரோம் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குயில்ட் சொகுசு இருக்கை மற்றும் பிரீமியம் தோற்றத்தை மேம்படுத்தும் சில அலங்கார அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
பர்மிங்காம் ப்ளூ எடிஷன்
பிஎஸ்ஏ நிறுவனத்தின் வரலாறு தொடங்கிய பர்மிங்காம் நகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கில், பிரத்யேக சில்வர் நிற சைடு பேனல் பேட்ஜ் மற்றும் தனித்துவமான எஞ்சின் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வடிவமைப்புடன் நவீன தோற்றத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இது அமைந்துள்ளது.
எஞ்சின்
இரண்டு ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலுமே சிங்கிள் சிலிண்டருடன் கூடிய 652 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45 எச்பி பவரையும், 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பெரிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுக்கு உரிய செயல்திறன் அனுபவத்துடன், ரெட்ரோ பைக்குகளின் தனித்துவமான ஓட்டுதல் உணர்வை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரெம்போ பிரேக்குகள் (Brembo Brakes), இரட்டை சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS), ஸ்போக் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பைக்கின் பாரம்பரிய தோற்றத்துக்கு ஏற்ற வகையில் இந்த அம்சங்கள் அமைந்துள்ளன.
சிறப்பு திட்டங்கள்
பிஎஸ்ஏ நிறுவனம் புதிய எடிஷன்களுக்கு நான்கு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரையிலான வாரண்டி வழங்கப்படுகிறது. விருப்பத்தின் அடிப்படையில் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறலாம். இதுதவிர, எட்டு ஆண்டுகள் வரை சாலையோர உதவி (Roadside Assistance), ஐந்து ஆண்டுகள் வரை ஆண்டு பராமரிப்புத் திட்டம் (AMC) ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 450க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகள் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications


