ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாக நான்கு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்!
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு பைக் மாடல்களை வெளியிட்ட கிளாஸிக் லெஜெண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம், இந்தியாவில் மேலும் நான்கு புதிய பைக் மாடல்களை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் 'BSA ஸ்கிராம்பிளர் 650' மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 'யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350' ஆகிய பைக் மாடல்களை வெளியிட்டது கிளாஸிக் லெஜெண்ட்ஸ்.
இந்தியாவில், ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய மூன்று கிளாஸிக் பைக் மாடல்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையையும் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளின் மூலம் 350 சிசி பைக்குகளையும், BSA பிராண்டின் மூலம் 650 சிசி பைக்குகளையும் கிளாஸிக் லெஜெண்ட்ஸ் விற்பனை செய்து வருகிறது. தற்போது ராயல் என்ஃபீல்டுடன் நேரடியாக போட்டியிட்டு வருவது இந்த பிராண்டுகளின் பைக்குகள் தான்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்து வந்தாலும் மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டிலேயே லாபகரமான நிறுவனமாக மாறியிருக்கிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். 2025ம் நிதியாண்டில் 32,482 பைக்குகளை விற்பனை செய்திருந்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் 45,409 பைக்குகளை விற்பனை செய்து லாபகரமானதாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் புதிய பைக்குகளுடன் தங்களது தடத்தை விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஜாவா மற்றும் யெஸ்டி பைக் மாடல்களை பல்வேறு வகையிலும் கிளாஸிக் லெஜெண்ட்ஸ் மேம்படுத்தியிருக்கிறது. அதற்கான பலன்களையே இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. நடப்பு 2027ம் நிதியாண்டின் இறுதிக்குள் 1 லட்சம் யூனிட்டுகள் தயாரிப்பு என்ற மைல்கல்லை எட்ட இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீதாம்பூரிலேயே மேற்கூறிய மூன்று பிராண்டுகளின் பைக் மாடல்களையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தொழிற்சாலை விரைவிலேயே அதன் முழுத்திறனை எட்டவிருக்கும் நிலையில், இதே தொழிற்சாலையையே மேலும் விரிவுபடுத்தலாமா அல்லது வேறு இடத்தில் புதிய தொழிற்சாலையைத் தொடங்கலாமா என அந்நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்த நிறுவனத்தின் வருடாந்திர பைக் விற்பனை மிகவும் குறைவாக இருக்கலாம். அதற்கு முக்கியக் காரணமாக குறைவான ஷோரூம்களைக் கூறலாம். தற்போது 500-க்கும் குறைவான ஷோரூம்களையே இந்தியா முழுவதும் வைத்திருக்கிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். இந்தாண்டு பண்டிகை காலத்திற்குள் 500 ஷோரூம்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
2028ம் நிதியாண்டின் இறுதிக்குள் இந்த அளவை 700 ஆக உயர்த்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் ஷோரூம்களைக் கொண்டிருக்கிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். சுமார் 40 ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாக தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிளாஸிக் லெஜெண்ட்ஸ் தான் நிறுவனப் பெயர் என்றாலும் 'ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ்' என்ற பெயரிலேயே ஷோரூம்களை நீங்கள் பார்க்கலாம்.
ஜாவா பிராண்டின் கீழ், ஜாவா 42, ஜாவா 42 FJ, ஜாவா 350, ஜாவா பெரக் மற்றும் ஜாவா பாபர் ஆகிய ஐந்து மாடல்களை விற்பனை செய்து வருகிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். அதேபோஸ் யெஸ்டி பிராண்டின் கீழ், யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி அட்வென்சர் மற்றும் யெஸ்டி ஸ்கிராம்பிளர் ஆகிய மூன்று பைக் மாடல்களையும், BSA பிராண்டின் கீழ் கோல்டு ஸ்டார் 650 மற்றும் ஸ்கிராம்பிளர் 650 ஆகிய இரண்டு மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டுக்கு நிகராகப் போட்டியிடக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்ட பிராண்டுகளை தன்னிடம் வைத்திருக்கிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். இந்த பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களை மட்டும் விரிவுபடுத்தும் பட்சத்தில் அதிக விற்பனையை கிளாஸிக் லெஜெண்ட்ஸ் பெற முடியும்.


Click it and Unblock the Notifications