ரூ.20 லட்சம் விலை... அறிமுகமான வேகத்தில் இந்தியாவில் விற்றுத் தீர்ந்த டுகாட்டி லிமிடெட் எடிஷன் பைக்!
இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம், தனது பந்தய பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கிய ஃபார்முலா 73 (Formula 73) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ள இந்த பைக், செயல்திறனைத் தாண்டி அரிய மோட்டார்சைக்கிள்களைச் சேகரிக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக வந்துள்ளது.
லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ள இந்த பைக் உலகம் முழுவதும் வெறும் 873 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து பைக்குகளுக்கும் ஏற்கெனவே முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேஷ வேலைப்பாடுகள்
1973-ம் ஆண்டின் புகழ்பெற்ற டுகாட்டி 750 சூப்பர் ஸ்போர்ட் டெஸ்மோ (750 Super Sport Desmo) மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக் ஃபார்முலா 73 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை மனதில் வைத்து பழமையான வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கஃபே ரேஸர் ரகத்திலான பைக் வெள்ளி மற்றும் நீலப்பச்சை நிறக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எரிபொருள் டேங்கின் மீது தங்க நிறக் வரிக்கோடு இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் சிறிய காற்றுத் தடுப்பான், கிளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஹேண்டில்பார் முனைகளில் ரியர் வியூ கண்ணாடிகள் ஆகியவை இதன் கஃபே ரேசர் தோற்றத்தை கச்சிதமாக காட்டுகின்றன.
பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள அலுமினியக் கூறுகள் அதன் பிரீமியம் தன்மையை வெளிப்படுத்துகின்றன. பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள், கால்களை வைக்கும் ஃபுட்பெக்குகள் உள்ளிட்ட பாகங்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரிஸோமா நிறுவனத்தின் எரிபொருள் டேங்க் மூடியும், இந்த மாடலுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டெர்மிக்னோனி சைலென்சர் அமைப்பும் இடம்பெற்றுள்ளன.
எஞ்சின் விபரம்
டுகாட்டி ஃபார்முலா 73 பைக்கில் 803 சிசி டெஸ்மோட்யூ (Desmodue) எல்-ட்வின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. காற்றால் குளிர்விக்கப்படும் இந்த எஞ்சின் 8,250 ஆர்பிஎம்மில் 73 எச்பி ஆற்றலையும், 7,000 ஆர்பிஎம்மில் 65.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ள பிரத்யேக புகைப்போக்கி அமைப்பு, பைக்கின் செயல்திறனுக்கும் தனித்துவமான தோற்றத்துக்கும் பங்களிக்கிறது. பழமையான வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், நவீன கால ஓட்டுநர் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதிகளையும் டுகாட்டி இதில் இணைத்துள்ளது.
இந்த பைக்கில் ஸ்டீல் டிரெல்லிஸ் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 41 மிமீ கேஒய்பி அப்சைடு டவுன் ஃபோர்க்கும், பின்புறத்தில் பிரீலோடு மாற்றியமைக்கக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. 17 அங்குல ஸ்போக் வீல்களில் பைரெல்லி டயாப்லோ ரோஸ்ஸோ IV டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் இல்லாத நிலையில் இந்த மோட்டார்சைக்கிளின் எடை 183 கிலோ எடை கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் விரைவாக கியர் மாற்ற உதவும் குயிக் ஷிஃப்டர் வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரையில், இரண்டு ரைடிங் மோடுகள், ரைடு-பை-வயர் அமைப்பு, முழுமையான எல்இடி விளக்குகள் மற்றும் 4.3 அங்குல வண்ண டிஎஃப்டி திரை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் வழிகாட்டும் நேவிகேஷன் வசதிகளையும் கூடுதல் உபகரணங்களாகப் பெற முடியும்.
என்ன சிறப்பு?
உலகளவில் 873 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படுவதால், ஃபார்முலா 73 ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மோட்டார்சைக்கிளாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு பைக்கிலும் தனித்துவமான வரிசை எண் இடம்பெறும். மேலும், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் சான்றிதழும், டுகாட்டியின் வடிவமைப்பு வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய சிறப்புப் பெட்டியும் வழங்கப்படுகின்றன.
விலை எவ்வளவு?
டுகாட்டி ஃபார்முலா 73 மோட்டார்சைக்கிளின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து யூனிட்டுகளும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், புதிய பைக்கை வாங்க விரும்புவோர் அடுத்தகட்ட ஒதுக்கீடு மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட டுகாட்டி விற்பனையாளர்களிடம் விசாரிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ரூ.20 லட்சம் விலையில் வெளியாகியுள்ள டுகாட்டி ஃபார்முலா 73 பைக்கின் முக்கிய ஈர்ப்பு அதன் வேகம் மட்டுமல்ல; அதன் பின்னணியில் இருக்கும் வரலாறும் அரிதான தன்மையும்தான். 73 எச்பி ஆற்றல் கொண்ட இந்த பைக், நவீன வசதிகளுடன் பழைய கால கஃபே ரேசர் தோற்றத்தை விரும்புவோருக்கு வித்தியாசமான தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications


