ரூ.16.53 லட்சத்தில் புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு V2 அறிமுகம்!
இததாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தனது புதிய ஹைப்பர்மோட்டார்டு V2 மற்றும் ஹைப்பர்மோட்டார்டு V2 SP மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வழக்கமான V2 மாடலின் விலை ரூ.16.53 லட்சமாகவும், கூடுதல் செயல்திறன் சார்ந்த அம்சங்களை கொண்ட V2 SP மாடலின் விலை ரூ.20.78 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களுக்குமான முன்பதிவும் இந்தியாவில் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இருந்த ஹைப்பர்மோட்டார்டு 950 மாடலுக்குப் பதிலாக இந்தப் புதிய தலைமுறை பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்பு, எடை குறைக்கப்பட்ட கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் நவீன மின்னணு வசதிகள் ஆகியவை இந்த பைக்குகளின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன. குறிப்பாக, நகரச் சாலைகளில் எளிதாக செல்வதற்கும், வளைவுகள் நிறைந்த சாலைகளில் வேகமாக செல்லும்போது சிறப்பான கட்டுப்பாட்டை வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

எஞ்சின் மற்றும் செயல்திறன்
புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு V2 மற்றும் V2 SP ஆகிய இரண்டு மாடல்களிலும் 890 சிசி, திரவக் குளிரூட்டப்பட்ட V2 எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120.4 எச்பி ஆற்றலை 10,750 ஆர்பிஎம்மிலும், 94 நியூட்டன் மீட்டர் டார்க்கை 8,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இரு திசைகளிலும் செயல்படும் குயிக் ஷிஃப்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிளட்சைப் பயன்படுத்தாமல் கியர்களை எளிதாக மாற்ற முடியும்.
புதிய சேஸி
இந்த பைக்குகளில் புதிய அலுமினியம் மோனோகாக் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கட்டமைப்பின் ஒரு பகுதியாக எஞ்சினும் இருப்பது முக்கிய அம்சமாக குறிப்பிடப்படலாம். இதனுடன் இரட்டை பக்க அலுமினியம் ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய V2 மாடலின் எடை 13 கிலோவும், V2 SP மாடலின் எடை 14 கிலோவும் குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இல்லாத நிலையில் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு V2 மாடல் 180 கிலோ எடையையும், V2 SP மாடல் 177 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இரண்டு பைக்குகளிலும் 880 மிமீ இருக்கை உயரம் வழங்கப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களுக்காக 865 மிமீ வரை குறைக்கும் மாடலும் உள்ளது. வழக்கமான V2 மாடலில் குறைந்த உயர இருக்கையுடன் பிரத்யேக சஸ்பென்ஷன் தொகுப்பையும் சேர்த்தால், இருக்கை உயரத்தை 850 மிமீ வரை குறைக்க முடியும்.

V2 SP மாடலில் கூடுதல் சிறப்பம்சங்கள்
வழக்கமான V2 மாடலில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய KYB முன்புற சஸ்பென்ஷனும், பின்புற மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 320 மிமீ டிஸ்க்குகளுடன் பிரெம்போ M4.32 காலிப்பர்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் செயல்திறனை விரும்பும் ரைடர்களுக்காக உருவாக்கப்பட்ட V2 SP மாடலில், ஓலின்ஸ் சஸ்பென்ஷன், எடை குறைந்த ஃபோர்ஜ்டு அலுமினிய வீல்கள் மற்றும் பிரெம்போ M50 பிரேக் காலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பைரெல்லி டயாப்லோ ரோஸ்ஸோ IV கோர்சா டயர்களும் இடம்பெற்றுள்ளன. இதன் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வெள்ளை நிற வீல்கள் மற்றும் 20ம் ஆண்டு சிறப்பைக் குறிக்கும் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்ப வசதிகள்
இரண்டு மாடல்களிலும் 5 அங்குல வண்ண TFT திரை வழங்கப்பட்டுள்ளது. ரைடிங் மோடுகள், பவர் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. முழு LED விளக்குகள் மற்றும் இரு திசைகளிலும் செயல்படும் குயிக் ஷிஃப்டர் ஆகியவையும் இரண்டு மாடல்களிலும் கிடைக்கின்றன. V2 SP மாடலில் கூடுதலாக டுகாட்டி பவர் லாஞ்ச் வசதி, பிட் லிமிட்டர் மற்றும் கார்பன் ஃபைபர் முன்புற மட்கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், ரூ.16.53 லட்சத்தில் தொடங்கும் புதிய ஹைப்பர்மோட்டார்டு V2, அதிக செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் பிரீமியம் பைக் ஆர்வலர்களைக் குறிவைக்கிறது. கூடுதல் விலைக்கு மேம்பட்ட சஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் குறைந்த எடை கொண்ட பாகங்களைப் பெற விரும்புவோருக்கு V2 SP மாடல் மாற்றுத் தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications


