பனிகாலே V2 S பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது டுகாட்டி.. விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் விலை உயர்ந்த ஸ்போர்ட்டியான பைக்குகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது டுகாட்டி. இந்த நிறுவனம் இந்தியாவில் தாங்கள் தற்போது விற்பனை செய்து வரும் பனிகாலே V2 S (Panigale V2 S) பைக்கை புதிய நிறத்துடன் அப்டேட் செய்துள்ளது.
இதுவரை டுகாட்டி ரெட் நிறத்தில் மட்டுமே பனிகாலே V2 S பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டுகாட்டி யெல்லோ என்ற புதிய நிறத்தையும் இந்த பைக்கிற்கு வழங்கியிருக்கிறது. ரெட்டை விட 33,000 ரூபாய் வரை கூடுதல் விலையில் யெல்லோ நிற பனிகாலே V2 S பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. அந்த வகையில் இந்தப் புதிய நிறம் கொண்ட பைக் 21.86 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

பனிகாலே V2 S மற்றும் பனிகாலே V2 என இரண்டு வடிவங்களாக இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய நிறம் S வேரியன்டிற்கு மட்டும் தான். ஸ்டாண்டர்டான பனிகாலே V2 பைக் டுகாட்டி ரெட் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தப் புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து பனிகாலோ V2 S பைக்கிலும், மெக்கானிக்கலாகவோ, வசதிகள் ரீதியாகவோ எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வகையிலும் மேம்பட்ட ஒன்றாகவே இந்த ஸ்போர்ட்டியான பைக் இருக்கிறது. எனவே புதிய அம்சங்களை அப்டேட்டுன் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்த பைக் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை என்பதால், அதே 890 சிசி, லிக்விட்-கூல்டு, V ட்வின் இன்ஜினே அப்டேட் செய்யப்பட்ட பைக்கிலும் இருக்கிறது. இந்த இன்ஜினானது 10,750 rpm-ல் 120 hp பவர் மற்றும் 8,250 rpm-ல் 93.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது டுகாட்டி க்விக் ஷிப்ட் (அப்ஷிப்ட் மற்றும் டவுன்ஷிப்ட் இரண்டிற்கும்) வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டான பனிகாலே V2 பைக்கை விட S வேரியன்டானது 17 கிலோ வரை குறைவான எடையையும், மேம்பட்ட மெக்கானிக்கல் அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக S வேரியன்டில் இரண்டு பக்கமும் ஓலின்ஸ் சஸ்பென்ஷன் செட்டப்புகளைக் கொடுத்துள்ளது டுகாட்டி (ஸ்டாண்டர்டு பைக்கில் மர்ஸோச்சி USD மற்றும் காயாபா மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் தான்).
இரண்டு வேரியன்ட்களிலும் இரண்டு பக்கமும் 17 இன்ச் வீல்கள் தான். அதில் பைரெல்லி டியாப்ளோ ரோஸ்ஸோ IV டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன் இந்த பைக்கில் ரைடிங் மோடுகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல் லெவல்கள், வீலி கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் கொடுத்துள்ளது டுகாட்டி. ரோடு, ரோடு ப்ரோ மற்றும் ரேஸ் என மூன்று டிஸ்பிளே மோடுகளுடன் கூடிய TFT டிஸ்பிளேவையும் இந்த பைக்கில் அந்நிறுவனம் கொடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி என்றாலே சிவப்பு தான் என்ற எண்ணமே இருந்து வந்தது. தற்போது மஞ்சள் நிறத்தை ஒரு பைக்கிற்கு அந்நிறுவனம் கொடுத்திருப்பது ரெஃப்ரெஷிங்காக உள்ளது. மேலும், டுகாட்டி ரெட் நிறத்தில் இருந்து இந்த டுகாட்டி யெல்லோ நிறம் பார்ப்பதற்கு தனித்துவமாக இருப்பதுடன், தனித்த ஒரு அடையாளத்தையும் கொடுக்கிறது.
பனிகாலே லைன்-அப்பிலேயே இந்த V2 S-ஐ தவிர்த்து, V2, V4, V4 S மற்றும் V4 R என வேறு நான்கு மாடல்களும் இருக்கின்றன. இது V2 S பைக்கிற்கு புதிய நிறம் கொடுக்கப்பட்டிருப்பதைப் போன்றே, V4 S மற்றும் V4 R ஆகிய பைக் மாடல்களுக்கும் புதிய நிறம் கொடுக்கப்படுமா என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications