இந்தியாவிடம் தோற்கும் ஜப்பான்.. மக்கள் மனசைப் புரிஞ்சுக்கலைன்னா இது தான் கதி!
இந்தியாவின் எரிபொருள் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா மற்றும் சுஸூகி ஆகியவை அதிகளவிலான விற்பனையுடன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று வரும் போது இன்னும் இந்த இரண்டு நிறுவனங்களும் முதல் வெற்றியை சுவைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு கொண்டு வரும் திட்டமும் இந்த நிறுவனங்களிடம் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை இந்திய நிறுவனங்கள் தான் கிங். வாடிக்கையாளர்களின் நாடி பிடித்து சரியான விகிதத்தில் வசதிகள், ப்ரீமியம்னஸ் மற்றும் விலை என எல்லாவற்றையும் கலந்து பரிமாறி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் முதல் ஐந்து இடங்களிலும் இந்திய நிறுவனங்களே இருக்கின்றன.

டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் எனர்ஜி, விடா (ஹீரோ) மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய ஐந்து நிறுவனங்களே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா, சுஸூகி மற்றும் யமஹா ஆகிய மூன்று ஜப்பானிய நிறுவனங்களுமே கடைசி இடங்களுக்குப் போட்டியிட்டுக் கொண்டிருப்பதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது.
ஹோண்டா மற்றும் சுஸூகி ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இந்தியாவில் தங்களது வெற்றிகரமான எரிபொருள் ஸ்கூட்டர் மாடல்களான ஆக்டிவா மற்றும் அக்சஸ் என்ற பெயர்களிலேயே முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டன. இதனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டின் போது வாடிக்கையாளர்கள் அதிகளவு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஹோண்டாவின் ஆக்டிவா e: (1.20 லட்சம் ரூபாய்) மற்றும் சுஸூகியின் e-அக்சஸ் (1.88 லட்சம் ரூபாய்) ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களுமே பேப்பரில் கூட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

பெரும்பாலான வாகனங்கள் பேப்பரில் பார்ப்பதற்கு சிறப்பான எண்களைக் கொண்டிருக்கும், அதிக ரேஞ்சு, சிறப்பான பெர்ஃபான்ஸ், கண்களைக் கவரும் வசதிகள் என்று. ஆனால் பயன்படுத்தும் போது நாம் எதிர்பார்த்த வகையில் ஸ்மூத்தாக அது இருக்காது அல்லது ஏதேனும் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் ஹோண்டா மற்றும் சுஸூகியின் மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுமே பேப்பரிலேயே போதுமான ரேஞ்சு அல்லது பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கவில்லை. மேலும் விலையும் அதிகமாகவே இருந்தது.
இதன் காரணமாக இரண்டு ஸ்கூட்டர்களுமே வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 1,161 e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே சுஸூகி விற்பனை செய்துள்ளது. மேலே கூறிய மூன்று ஜப்பானிய நிறுவனங்களில் சுஸூகி தான் அதிக விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது.
ஹோண்டா நிறுவனமானது ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் QC1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1,039 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருக்கிறது. யமஹா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தான் EC-06 என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தங்களது முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பாக இந்தியாவில் களமிறக்கியது. ஏப்ரல் வரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 140 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது.
ஹோண்டா மற்றும் சுஸூகியின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றி ஒரு வரி மேலே பார்த்தோம். யமஹாவின் EC-06 (1.68 லட்சம் ரூபாய்) பற்றி சொல்ல வில்லையே. இது முழுவதுமாக யமஹா தயாரித்த ஸ்கூட்டர் கிடையாது. யமஹாவிற்காக இந்தியாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டியே EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்து யமஹாவிற்காக தயாரித்தும் கொடுத்து வருகிறது.
ஆனால் இதனை மோசமான ஸ்கூட்டர் என்று சொல்ல முடியாது. நல்ல சிறப்பம்சங்கள், பிராக்டிகலான வசதிகள், தனித்துவமான டிசைன் என எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. விலை தான் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. சற்று குறைவான விலையில் இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மூன்று நிறுவனங்களுமே கடந்த ஓராண்டிற்குள்ளாகவே இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கால் பதித்திருக்கின்றன. எனவே இதுவே முடிவு கிடையாது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான திட்டங்களைத் தீட்டி வருகின்றன. ஆனால் டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கால்களை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் வலுவாக ஊன்றி வரும் நிலையில், மூன்று ஜப்பானிய நிறுவனங்களும் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications