எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த இந்திய ஆட்டோமொபைல் சந்தை
இந்தியா ஆட்டோமொபைல் சந்தை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்த 2026ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில், தற்போதே 1 மில்லியன், அதாவது 10 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜூலை 6 நிலவரப்படி 2026ம் ஆண்டில் மட்டும் சுமார் 10,05,279 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
இதில் பெரும்பான்மை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் என்பதை நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை. எலெக்ட்ரிக் பைக்குகளின் அளவு இதில் கணிசம் தான். அந்த வகையில் இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். இதில் 83 சதவீத விற்பனை டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் எனர்ஜி, ஹீரோ (விடா) மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய டாப் 5 நிறுவனங்கள் ஜூலை 6ம் தேதி வரை சுமார் 8.39 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளன. அடுத்த ஐந்து இடங்களில் இருக்கும் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, ரிவர் மொபிலிட்டி, பிகாஸ், சிம்பிள் எனர்ஜி மற்றும் ரிவோல்ட் ஆகிய ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து 1,00,865 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இதுவரை விற்பனை செய்துள்ளன.
இதே வேகத்தில் சென்றால் இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை 20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, ஒரே ஆண்டில் 2 மில்லியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை என்ற புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய மைல்கல்லை இந்திய ஆட்டோமொபைல் சந்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. ஏனென்னறால் தற்போது ஒவ்வொரு நாளும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் எரிபொருள் இருசக்கர வாகனங்களுடன் போட்டியிடும் அளவிற்குக் கூட எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தைய உயர்ந்துவிடும் எனத் தோன்றுகிறது. அந்தளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய விற்பனை நிலவரப்படி இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை சந்தை 54 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
முதலிரண்டு இடங்களில் இருக்கும் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து 48 சதவீத எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனைக்குக் காரணமாக இருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனமானது இதுவரை 2.61 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், பஜாஜ் நிறுவனம் 2.26 லட்சம் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்த 2026ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் ஏத்தர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா ஆகிய நிறுவனங்கள் இதுவரை முறையே 1.74 லட்சம் மற்றும் 1.09 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த 2026ம் ஆண்டு விற்பனை செய்துள்ளன. ஓலாவின் விற்பனை சரிந்திருக்கிறது என்றாலும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் அந்நிறுவனம் ஆறு மாதங்களில் 68,148 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி, கிரீவ்ஸ் மொபிலிட்டி, ரிவர் மொபிலிட்டி மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகிய சிறிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையும் எப்போதும் இல்லாத அளவிற்கு பல மடங்கு உயர்ந்திருப்பது, இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையின் வளர்சசியையே காட்டுகிறது. அடுத்த வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மேலும் மேலும் புதிய உயரங்களை, இதுவரை பார்க்காத உயரங்களை தொடவிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
தலைப்பில் 'படைத்தை' என எழுத்துப்பிழையுடன் இருந்தது 'படைத்த' என சரியாக மாற்றப்பட்டது


Click it and Unblock the Notifications