உச்சத்தில் பெட்ரோல் விலை.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வரும் மக்கள்.. நீங்க இன்னும் வாங்கலையா?
பெட்ரோல் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை மாற்ற தனிநபராக நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே மக்கள் தங்களுடைய பயன்பாடுகளை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆம், முன்பை விட இப்பது அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் இந்த 2026ம் ஆண்டு அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனைத் தரவைக் கொண்டு நாம் உறுதிபடுத்திக் கொள்ள முடியும். மார்ச் மாதத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்ச விற்பனை அளவை கடந்த மே மாதம் பதிவு செய்திருக்கிறது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை சந்தை.

கடந்த மே மாதம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1.70 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதில் பெரும்பான்மையாக சுமார் 95 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றே நாம் கூறலாம். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டால் கடந்த 2026 மே மாதம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை எவ்வளவு உயர்ந்திருக்கிறது, வாடிக்கையாளர்கள் இப்போது எதை முதன்மைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்தாண்டு, அதாவது 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் 1.05 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை அளவு 63 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிகபட்சமாக சுமார் 1.99 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகின.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் மானியம் நிறுத்தப்படவிருப்பதாக வந்த தகவலையடுத்து மார்ச் மாதம் அதிகளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் அதன் பின்பும் கடந்த இரண்டு மாதங்களாக அதிகளவிலான விற்பனை தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் மனநிலையும் மாறி வருவதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது வாடிக்கையாளர்கள் அதிகளவிலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அது வேறெதுவும் இல்லை, அவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை தான். முன்னர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரச்சினை ஏதும் இல்லாமல் இருக்குமா என்ற ஒருவித குழப்பதுடனேயே தான் மக்கள் அதனை அனுகினார்கள்.
பல ஆண்டுகளாக பெரியளவில் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் இயங்கி வருவது, குறைவான பயன்பாட்டு செலவைக் கொண்டிருப்பது மற்றும் எரிபொருள் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டிருப்பது ஆகிய காரணங்களினால் தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பயன்பாட்டில் டிவிஎஸ்ஸே முன்னணியில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பஜாஜ் மற்றும் ஏத்தர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் மக்கள் அதிகளவில் வாங்குகிறார்கள். ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா பிராண்டு வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னர் முன்னணியில் இருந்த ஓலா எலெக்ட்ரிக் தற்போது ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தாலும், மீண்டும் வேகமாக மீண்டு வரத் தொடங்கியிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மக்கள் வாங்கிக் குவிப்பதை ஒரு புரட்சி என்றே கூட நாம் சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் அதகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள விற்பனை ஆக ஆக, அது மேலும் அதிகளவிலான விற்பனைக்கே வழிவகுக்கும். வாய் வழி விளம்பரம் இந்தியாவில் மிகவும் முக்கியம். அந்த வகையில் இப்போது மக்களின் வாய் வழியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயணம் செய்யத் தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications